அதிஷ்ட லாபச்சீட்டிழுப்பில் தனக்கிருந்த வெற்றிவாய்ப்பை, நியாயமற்ற வகையில் Lottoland நிறுவனம் பறித்துவிட்டதாகக் கூறி, 201 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரிய பேர்த் நகரைச்சேர்ந்த இலங்கையர் ஒருவரின் முறைப்பாட்டினை அதிஷ்டலாபச்சீட்டு விவகாரங்களை விசாரிக்கும் ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப்பிரஜைகள் மாத்திரமே Lottoland அதிஷ்ட லாபச்சீட்டிழுப்பில் கலந்துகொள்ளமுடியும் என்ற விதிமுறைகளை மீறி, பொய்யான தகவலைக்கூறி சீட்டிழுப்பில் கலந்துகொண்ட குறிப்பிட்ட இலங்கையரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஆணைக்குழு கூறியிருக்கிறது.
ஆனால், குறிப்பிட்ட அதிஷ்ட லாபச்சீட்டிழுப்பு தொடர்பான கணக்கினை ஆரம்பிப்பதற்கு முன்னர் தான் அதிஷ்டலாபச்சீட்டு நிறுவன உத்தியோகத்தரிடம் கேட்டபோது அவர், போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று கூறியதாகவும் அதன்பிரகாரமே தான் போட்டியில் கலந்துகொண்டதாகவும் கூறிய இலங்கையர் - தான் 3 பந்தயங்களுக்கென 50 டொலர்களைச் செலுத்தியிருந்ததாகவும் அதில் 2 தோல்வியடைந்திருந்தநிலையில் 3வது சந்தர்ப்பத்தினை நிராகரித்த அதிஷ்டலாபச்சீட்டிழுப்பு நிறுவனம் தனது வெற்றிவாய்ப்பை பறித்துவிட்டதாகவும், ஆகவே தான் வெற்றிபெற்றிருக்கக்கூடிய 201 மில்லியன் டொலர்களை தனக்கு செலுத்தவேண்டும் என்றும் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தார்.
Lottoland நிறுவனம் இதுதொடர்பில் பதிலளிக்கும்போது, சீட்டிழுப்பில் குறிப்பிட்ட நபர் கலந்துகொள்வது தொடர்பாக தங்களது உத்தியோத்தரிடம் விசாரித்தபோது, குறித்த நபர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்பதற்கான அடையாளத்தை நிரூபிப்பதற்காக ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டிய தேவையை விளங்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நபர், தன்னை இலங்கையர் என்று கூறுவதை மறைத்து ஆஸ்திரேலியர் என்றே அடையாளப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன், அதிஷ்டலாபச்சீட்டு விதிமுறைகளின்படி, தவறான தகவல்களை வழங்கியவர்கள் என்று அடையாளம் காணப்படுகிறவர்களை போட்டியின் எந்தப்புள்ளியிலும் வைத்து இடைநிறுத்துவதற்கு நிறுவனத்துக்கு உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த இருதரப்பு வாதங்கள் - நியாயங்கள் - விதிமுறைகள் ஆகியவற்றை விசாரித்த ஆணைக்குழு முறைப்பாட்டாளரான இலங்கை நபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
