SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய செனட் (Senate) எப்படி இயங்குகிறது?

ஆஸ்திரேலிய செனட் சபை அல்லது மேற்சபை (Senate or the Upper House) எப்படி இயங்குகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

The Senate chamber at Parliament House in Canberra
The Senate Chamber at Parliament House in Canberra Source: AAP

2 min read

Published

Updated

Source: Australian Senate


Skip to article content

ஆஸ்திரேலிய செனட் சபை அல்லது மேற்சபை (Senate or the Upper House) எப்படி இயங்குகிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் இரு அவைகளுள் ஒன்று மக்கள் பிரதிநிதிகள் சபை (House of Representatives) - இது பற்றி முன்னர் பார்த்தோம்.  மற்றையது செனட் சபை அல்லது மேற்சபை (Senate or the Upper house) - இதுபற்றி இப்போது பார்ப்போம்.

மக்கள் பிரதிநிதிகள் சபை அங்கீகரிக்கும் மசோதாக்களை மறுபரிசீலனை செய்து அங்கீகரிக்கும் அதிகாரத்தை மட்டும் கொண்டதல்ல செனட் சபை. அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் சக்திமிக்க அமைப்பாகவும் செனட்சபை செயல்படுகிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ (Proportional Representation) அடிப்படையிலேயே செனட்டர்கள் தெரிவு செய்யப்படுவதால், சுயேட்சைக் குழுக்களும் சிறு கட்சிகளின்/அணிகளின் பிரதிநிதிகளும் செனட்டர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கும், சமூகத்தில் அவர்கள் சார்ந்த மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கும், அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க களம் உருவாக்கிக் கொடுப்பதற்கும் செனட்சபை வழியமைத்துக் கொடுக்கிறது.

உண்மையில், இந்த சிறுகட்சிகள் மற்றும் அமைப்புகள் தான், ஆளுங்கட்சிகள் முன்மொழியும் மசோதாக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவருவதை கடந்த தசாப்தங்களில் பார்க்கிறோம். இதைத்தவிர, செனட்சபையிலுள்ள 'குழுநிலை பரிசீலனை' (Committee System) காரணமாக, பதவியிலிருக்கும் அமைச்சர்கள் மற்றும் பொது ஊழியர்கள் (Public Servants) ஆகியோர், அரசின் சட்டங்கள், கொள்கைகள் என்பவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை ஆராயும் அதிகாரமும் செனட் சபைக்கு உண்டு.

மாநிலத்திற்கு 12 உறுப்பினர்கள் வீதம் 72 உறுப்பினர்களும், territory என்ற பிராந்தியத்திற்கு இரண்டு உறுப்பினர் (Australian Capital territory, Northern Territory) வீதம் 4 உறுப்பினர்களும்- மொத்தம் 76 உறுப்பினர்களைக்கொண்டது செனட் சபை. மாநில செனட்டர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள். பிராந்திய செனட்டர்களின் பதவிக்காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும் மாநில செனட்டர்கள் 36பேர் தெரிவு செய்யப்படுவார்கள். அப்போது 6 வருடங்களைப் பூர்த்தி செய்த செனட்டர்கள் பதவி விலகுவார்கள்.

தற்போது 'இரட்டைக்கலைப்பு' (Double dissolution) செய்யப்பட்டிருப்பதால், 76 செனட்டர்களும் ஒரே நேரத்தில் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள். இவர்களுள் 36+4 பேர் ( பிராந்திய செனட்டர்கள் உட்பட) 3 வருடங்கள் பதவியிலிருப்பார்கள். மிகுதி 36 பேர், 6 வருடங்கள் பதவியிலிருப்பார்கள். இப்படிச்செய்வதால், ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும், 40 செனட்டர்கள் தேர்வாவது, மீண்டும் நடைமுறைக்கு வரும்.

செனட் உறுப்பினர்களுள் ஒருவர் 'அவைத்தலைவராக' (President of Senate)த் தெரிவு செய்யப்படுவார். துணைத்தலைவர் ஒருவரும் தெரிவு செய்யப்படுவார்- இவர் குழுநிலை விவாதங்களுக்கு தலைமைதாங்குவதோடு, தலைவர் பிரசன்னமாகாதபோது தலைவராகப் பொறுப்பேற்று செயல்படுவார். ஆளுங்கட்சி சார்பில் பேசவல்ல, Leader of the Government, எதிர்கட்சிசார்பில் பேசவல்ல, Leader of the Opposition ஆகியோரும் நியமிக்கப்படுவார்கள். தாங்கள் சார்ந்த கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில்  பங்கேற்பதையும் வாக்கெடுப்பில் பங்கேற்பதையும் உறுதி செய்யும் 'கொறடாக்கள்' (whips) இருவர் நியமிக்கப்படுவார்கள்.

இம்முறை செனட் சபைக்கு வாக்களிக்கும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டில் உள்ள தடித்த கோட்டுக்கு மேல் உள்ள கட்டங்களில் ஆக்க்குறைந்தது, 6 கட்டங்களில் தன் விருப்ப ஒழுங்கின்படி, வாக்காளர்கள், 1 தொடக்கம் 6 வரை இலக்கங்களை இடவேண்டும். அல்லது, கோட்டுக்குக் கீழ், ஆக க்குறைந்தது, 12 கட்டங்களில் விருப்பவரிசையின்படி இலக்கமிடவேண்டும்.

வாக்களிப்பது நம்நாட்டில் கட்டாயமாகும். அத்தோடு நம் வாக்கு நிராகரிக்கப்பட மாட்டாது என்பதையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்களிப்பது எப்படி என்பதை வாக்குச்சாவடியிலுள்ள அலுவலர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நம் வாக்குச்சீட்டில் இலக்கமிடும்போது பிழை ஏதும் ஏற்பட்டால், புதிய வாக்குச்சீட்டைக் கேட்டுப்பெறலாம்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now