ஆஸ்திரேலியா பல மனித உரிமைச்சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுச் சட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமெனவும் ஐ.நா-வின் மனித உரிமைகள் சபைக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் UN working group on arbitrary detention அமைப்பு காட்டமாகக் கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு நவுறு தீவிலுள்ள 14 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரை காலவரையறையின்றி பிரித்துவைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரம் ஐ.நா சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் UN working group on arbitrary detention அமைப்பின் இக்கூற்று வெளியாகியுள்ளது.
ஈரானிலிருந்து வந்து புகலிடம் கோரிய Edris Cheragi என்ற நபர் மீது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் அவர் எவ்வித விசாரணைகளுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இவ் அமைப்பு இதேபோன்று பலர் கட்டாயத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் நீண்டநாட்களாக புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சட்டங்களை ஆஸ்திரேலியா மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ள UN working group on arbitrary detention ஆஸ்திரேலியாவின் குடிவரவுச் சட்டம் மீளாய்வு செய்யப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
