ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா உள்வாங்கும் நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை முப்பதினாயிரம் பேரினால் குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.
பிரதான நகரங்களில் ஏற்பட்டுள்ள சன நெருக்கடி மற்றும் நகரக்கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய சேவை விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முக்கிய குடிவரவுக்கொள்கைகளில் திருத்தம் கொண்டுவந்துள்ள ஆஸ்திரேலிய அரசு, அதனை இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்களின் பிரகாரம், தொழில்துறை சார்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு வருகை தரும் குடியேற்றவாசிகள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையைப்பெற்றுக்கொள்வதற்கு நகரங்களிலிருந்து தூர இடங்களில் சென்று 3 வருடங்களுக்கு குறையாமல் வசிப்பது, வெளிநாட்டு மாணவர்கள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி போன்ற பிரதான இடங்களிலிருந்து தூர இடங்களில் வசிப்பது மற்றும் ஆஸ்திரேலியா உள்வாங்கும் வருடாந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை ஒரு லட்சத்து 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரமாக குறைப்பது போன்ற மாற்றங்களை பிரதமர் இன்று அறிவித்தார்.
இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 30 ஆயிரத்தால் குறைக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு மாத்திரமே விசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை skilled workers-தொழில்துறை சார்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு வருபவர்களுக்கென regional பிராந்தியங்களுக்கான புதிய இரண்டு விசாக்களும் அறிமுகமாகின்றன.
மொத்தமாக உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் 23 ஆயிரம் இடங்கள் இவ்விசாக்களுக்கென ஒதுக்கப்படவுள்ளது.
குறித்த இரு விசாக்களில் வருபவர்கள் சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேர்ன், பெர்த், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்கள் தவிர வேறு regional பகுதிகளில் ஆகக்குறைந்தது 3 வருடங்கள் வாழ்ந்தால் மாத்திரமே நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதிபெறுவர்.
அதேபோன்று regional பகுதிகளில் கல்விகற்க முன்வரும் சர்வதேச மற்றும் ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு 15 ஆயிரம் டொலர் பெறுமதியிலான புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர regional பகுதியில் கல்விகற்ற சர்வதேச மாணவர் ஒருவர் படிப்பு முடிந்த பின் மேலதிகமாக ஒருவருடம் post-study work விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.
