சீனர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கும் முடிவில் ஆளும் Malcolm Turnbull அரசு பின்னடிக்க தொடங்கியிருப்பதாகவும், அதேவேளை இந்தியர்களை உள்வாங்கும் முடிவில் அதிக சிரத்தையுடன் காணப்படுவதாகவும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தவுகளை மேற்கோள்காட்டி FairFox ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களில் 1559 சீனர்களின் குடியுரிமை விண்ணப்பங்களுக்கு மாத்திரம் அங்கீகாரம் வழங்கியுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை திணைக்களம், கடந்த வருடம் இதேகாலப்பகுதியில் 6500 சீனர்களை ஆஸ்திரேலியர்களாக அங்கீகரித்திருந்தது.
முந்தைய வருடங்களில் குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் பத்தாயிரம் சீனர்களில் குறைந்தது 8000 முதல் 9000 வரையான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு குடிவரவு திணைக்களம் குடியுரிமை வழங்கியிருந்தது.
ஆனால், அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஆரம்பித்துள்ள பல்வேறு இராஜதந்திர முறுகல் நிலைகளை தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி சீனாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் இரகசிய குடியுரிமைப் போரா என்று அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
FairFox ஊடகச் செய்தியின்படி - 2016 - 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த வெளிநாட்டவர்களின் ஆறு சதவீதமானவர்கள் சீனர்கள். இவர்களில் மூன்று சதவீதமானவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால், இதே காலப்பகுதியில் குடியுரிமைக்காக விண்ணப்பித்த இந்தியர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் வீதம் 15 இலிருந்து 18 ஆக அதிகரித்திருக்கிறது.இங்கிலாந்து நாட்டவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் வீதம் 14 இலிருந்து 16 ற்கும் ஆபிரிக்கர்களுக்கு மூன்று வீதத்திலிருந்து ஐந்து வீதத்துக்கும் அதிகரித்திருக்கிறது. ஆனால், சீனர்களின் விண்ணப்ப அங்கீகரிப்பு வீதம் ஆறு வீதத்திலிருந்து மூன்று வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இதேவேளை, Malcolm Turnbull ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 ஜூன் மாதம் வரையில் 241 606 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன.
Malcolm Turnbull ஆட்சிக்கு வந்தபோது 45,985 விண்ணப்பங்கள் மாத்திரமே கிடப்பிலிருந்தன. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் Turnbull ஆட்சியில் அங்கீகரிக்காமல் கிடப்பிலுள்ள குடியுரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு 425 வீதமாகும்.
