இலங்கைக்கு இரண்டு நாள் அதிரடி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton ஈஸ்டர் தற்கொலைக்குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான நீர்கொழும்பு கத்தான தேவாலயத்துக்கு சென்று தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக மலர் வணக்கம் செலுத்தினார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் வணக்கத்தலமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக கூறினார். பயங்கரவாத செயல்கள் எந்தப்பின்னணியில் மேற்கொள்ளப்பட்டாலும் அவை கண்டிக்கப்படவேண்டியது என்றும் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ள அமைச்சர் Dutton இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி அகதிகள் தாங்கிய படகுகள் வரத்தொடங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து கலந்துரையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஆறு படகுகளில் ஆஸ்திரேலியா நோக்கி அகதிகள் புறப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்களையடுத்து அமைச்சர் Peter Dutto-இன் அதிரடி விஜயம் இடம்பெற்றிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி படகுகளின் எண்ணிக்கை குறித்து Dutton-இன் உள்துறை அமைச்சு உறுதி செய்யாதபோதும் இலங்கையிலிருந்து அகதிகள் புறபட்டு வந்துகொண்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடல்பாதுகாப்பை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப்பாதுகாப்பு மற்றும் கரையோர பாதுகாப்புப்படையினரின் தாழப்பறக்கும் விமானங்கள் கடந்த இரண்டு நாட்களாக கிறிஸ்மஸ் தீவை அண்டிய பகுதிகளில் தொடர் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் ஈஸ்டர் தற்கொலைக்குண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து விஜயம் செய்கின்ற முதலாவது முக்கிய ஆஸ்திரேலிய அமைச்சர் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் Peter Dutto-இன் பயணத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோருடன் சந்தித்து ஆட்கடத்தலை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
Share
