கிரிக்கெட் உபகரணங்களை விற்பனை செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு எதிரான கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி தனக்கு தரவேண்டிய முப்பது லட்சம் ஆஸ்திரேலிய டொலர்கள் தரப்படவில்லை என்றும் குறிப்பிட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்திலிருந்து தான் வெளியேறிய பின்னரும் தனது பெயர் அந்த நிறுவனத்தினால் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது என்றும் சச்சின் டெண்டுல்கர் சார்பில் ஆஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Spartan Sports International என்ற நிறுவனம் Sachin by Spartan என்ற பெயரில் தமது கிரிக்கெட் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு சச்சின் டெண்டுல்கருடன் 2016-இல் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டொலர்களை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து கடந்த செப்ரெம்பர் மாதம் சச்சின் டெண்டுல்கர் வெளியேறிய பின்னர் தனக்கு செலுத்தவேண்டிய பணத்தை கோரியும் இன்னமும் அது கொடுக்கப்படவில்லை என்றும் ஆனால், Spartan Sports International தனது சமூக வலைத்தளங்களில் Sachin by Spartan என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்திவருவதாகவும் சச்சின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள சச்சின் டென்டுல்கர் தனக்கு செலுத்தப்படவேண்டிய பணத்தை தருவதற்கான ஏற்பாட்டை கோரியிருப்பது மட்டுமல்லாமல், தனது பெயரில் குறிப்பிட்ட நிறுவனம் கிரிக்கெட் உபகரணங்களை விற்பதற்கும் தடை கோரியுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Share
