ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக பயணத்தை மேற்கொள்ளவிருந்த இலங்கையர்கள் 131 பேரை கைது செய்துள்ளதாக மலேசிய பொலீஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடந்தி வந்த மிகப்பெரிய கும்பல் ஒன்றை கைது செய்வதற்காக Tanjung Gemuk பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது இவர்கள் அனைவரும் அகப்பட்டிருக்கிறார்கள் என்று மலேசிய பொலீஸார் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்றும் இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள், நான்கு சிறுவர்கள், ஐந்து சிறுமிகள் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பாக மலேசிய பொலீஸ் தலைமை அதிகாரி முகமட் பூஸி ஹரூன் கூறும்போது -
கடந்த வருட மத்தியிலிருந்து சர்வதேச தொடர்புகளுடன் - இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, மலேசியா நாட்டு குழுக்களுடன் - சேர்ந்து இயங்கிவந்த மிகப்பெரியதொரு வலைப்பின்னணியை தாங்கள் மடக்கி பிடித்திருப்பதாகவும் இந்தோனேஷியாவை சேர்ந்த மூவரும் மலேசியாவை சேர்ந்த நால்வரும் இந்த நடவடிக்கையில் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் படங்கள் உட்பட இவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்யவிருந்த "எத்ரா" என்ற கடல்கலத்தின் படத்தையும் மலேசிய பொலீஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

