SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய நகர மையங்களில்(CBD) வாகனம் ஓட்டுபவர்களிடம் கட்டணம் அறவிடுமாறு பரிந்துரை!

Infrastructure
Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலிய மாநிலங்களின் தலைநகர்களில் அதிகரித்துவரும் வாகன நெருக்கடியை (Peak time traffic) குறைப்பதற்கு நகரத்தின் CBD-மையத்தெருக்களின் வழியாக குறிப்பிட்ட நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டுனர்களிடம் பணம் அறவிடுகின்ற முறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கும் Grattan Institute என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நகர மையத்தெருக்களில் அதிகரித்துவரும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் Grattan Institute அரசுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிட்னி, மெல்பேர்ன், பிறிஸ்பன் நகர்களில் இவ்வாறு நெருக்கடியான நேர வாகனப்போக்குவரத்தினை கட்டுப்படுத்துவதற்கு இதுவே மலிவானதும் நேர்த்தியானதுமான தீர்வு என்று அமைப்பின் தலைவர் Marion Terrill கூறியுள்ளார்.

லண்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் இந்த முறை  பின்பற்றத்தொடங்கிய பின்னர் அதற்கு உரிய பலாபலன் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நெருக்கடியான நேரத்தில் CBD வீதிகளை பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்களிடம் பணம் அறவிடுவதன் மூலம், தற்போது CBD-இல் குறிப்பிட்ட நேரத்தில் வாகன நெருக்கடியை ஏற்படுத்தும் 40 வீதமான வாகனங்களை குறைக்கமுடியும் என்றும், CBD தெருக்களில் வாகனங்களின் வேகத்தை 16 வீதத்தினால் அதிகரிக்கமுடியும் என்றும், நகருக்கான வீதிகளில் பயணம் செய்யும் வாகனங்களின் வேகத்தை 20 வீதத்தினால் அதிகரிக்கமுடியும் என்றும் Marion Terrill குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தெருக்களை புதிதாக உருவாக்குவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவது போன்ற வழிமுறைகள் அரசுக்கு கடந்த காலங்களில் உரிய பலன்களை கொடுக்கவில்லை என்றும் தற்போது முன்வைக்கப்படும் யோசனை நேர்த்தியானதும் மலிவானதும் என்றும் Marion Terrill கூறியுள்ளார்.

இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், குறிப்பிட்ட நேரத்தில் - காலையில் 8 மணி முதல் 9.30 மணிவரை, மாலையில் 4 மணி முதல் 6 மணிவரை - CBD தெருக்களில் பயணம் செய்யும் ஓட்டுனர்களிடம் மெல்பேர்ன் - பிறிஸ்பன் - அடிலெய்ட் - பேர்த் நகரங்களில் 5 டொலரும் சிட்னியில் 8 டொலரும் அறவிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனினும் இப்பரிந்துரை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள NSW மாநில Premier Gladys Berejiklian- வாகன ஓட்டுனர்கள் ஏற்கனவே Toll-க்கு கட்டணம் செலுத்திவரும் நிலையில் புதிதாக இன்னுமொரு கட்டணத்தை அறிவடும் எண்ணம் தமது அரசுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now