ஆஸ்திரேலியாவின் Northern Territory பகுதியில் சுற்றுலாவுக்கு சென்ற இளம் குடும்பமும் அவர்களின் நண்பரும் ஆளரவமற்ற பிரதேசத்தில் வாகனம் பழுதடைந்த நிலையில் உணவு - நீர் இல்லாமல் உடல் வரண்டு இறந்துபோயுள்ளனர்.
இவர்களது சடலங்களை அப்பகுதியினால் வைத்தியசாலைக்கு சென்ற ஒருவர் கண்டு பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளன.
Northern Territory-இன் புறநகர் பகுதியான Willowra கிராமத்திலிருந்து Warra Warra என்ற இடத்துக்கு 19 வயதான இளம் தம்பதியினர் தமது 3 வயது மகன் மற்றும் 12 வயது நண்பருடன் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.
பயணம் செய்த பாதி வழியில் அவர்களது வாகனம் பழுதடைந்துவிட்டது. இந்தப்பிரதேசம் தொலைபேசிக்கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டதாகும்.
வாகனத்தை திருத்துவதற்கு உதவிகோருவதற்காக எல்லோரும் கால்நடையாக 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஊர் பகுதிகளை நோக்கி சென்றுள்ளார்கள். நெடுந்தூரம் நடந்து சென்றபோதும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவர்களால் ஊர் பகுதிகளையும் அடையமுடியவில்லை. பசியும் தாகமும் ஏற்படத்தொடங்கியது. ஆனால், கொண்டுவந்த ஆகாரங்களை பழுதடைந்த வாகனத்திலேயே விட்டு சென்றிருந்தார்கள்.
சுமார் 40 செல்ஸியஸ் வெயிலில் ஏற்கனவே களைப்படைந்திருந்த நால்வரும் வாகனத்துக்கு திரும்பும் நிலையிலிருக்கவில்லை. அதிகூடிய வெப்பநிலையால் உடல் வரண்டு நீண்ட நேரம் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் இவர்கள் அங்கு உயிரிழந்துள்ளார்கள்.
கடந்த புதன்கிழமை அப்பகுதியால் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த அப்பகுதிவாசியொருவர், இவர்களது சடலங்களை கண்டு பொலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அப்பகுதிக்கு விரைந்த பொலீஸார் இளம் குடும்பத்தினரின் சடலங்களை அவர்கள் பயணம் செய்த வாகனத்திலிருந்து நாலரை கிலோமீற்றர் தொலைவிலும் அவர்களது 12 வயது நண்பரின் சடலத்தை 120 மீற்றர் தூரத்திலுமிருந்து மீட்டுள்ளனர்.
இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் உயிழந்திருக்கலாம் என்று பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.முதலில் இவர்களது மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டதாக நம்பப்பட்டாலும் உண்மையான காரணம் பின்னரே கண்டறியப்பட்டது.
இவர்களுடன் பயணம் செய்த வேறு யாராவது குறிப்பிட்ட பிரதேசத்தில் அகப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்கு பொலீஸார் தரை வழியிலும் வான் வழியாலும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறார்கள்.
