SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய பொலீஸ் வேடத்தில் EFTPOS-உடன் வந்த பணம்பறிக்கும் நபர்கள்!

Public domain
Source: Public domain

2 min read

Published

Updated


Skip to article content

வரித்திணைக்களத்துக்கு (ATO) பணம் செலுத்தாத காரணத்துக்காக கைது செய்ய வந்திருப்பதாக EFTPOS இயந்திரத்துடனும் கை விலங்குடனும் (hand cuff) பொலீஸாரின் சீருடையணிந்து வீடுதேடிச்சென்ற சென்ற இரண்டு நபர்களை பார்த்து வீட்டுக்காரர் சுதாரித்துக்கொண்டதையடுத்து அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். இந்த சம்பவம் அடிலெய்ட்டில் இடம்பெற்றுள்ளது.

அடிலெய்ட் Salisbury Downs பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அநாமதேய தொலைபேசி அழைப்பில் - குறிப்பிட்ட வீட்டுக்காரர் வரித்திணைக்களத்துக்கு பணம் செலுத்தவேண்டியிருப்பதாக தெரிவித்து உடனடியாக திருப்பி அழைக்குமாறு இலக்கம் ஒன்றினை தகவல்பெட்டியில் கொடுத்திருக்கிறார்கள். அந்த இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்ட வீட்டுக்காரர் அது நிச்சயமாக போலி தொலைபேசி புரளியர்கள் என்ற முடிவோடு எந்த தகவலையும் வழங்காது அழைப்பை துண்டித்துவிட்டார்.

அடுத்த அரைமணிநேரத்தில் அந்த வீட்டுக்கு இரண்டு நபர்கள் வந்து கதவை தட்டியிருக்கிறார்கள். திறந்து பார்த்தபோது, நீல நிற சீருடையணிந்து, சேர்ட்டில் FEDERAL POLICE என்ற பெயருடன் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

தாங்கள் FEDERAL POLICE என்றும் அடிலெய்ட் கிளையிலிருந்து வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அவர்களது இடுப்பில் கைது செய்வதற்கான விலங்கும் தொங்கியபடியிருந்திருக்கிறது. வரித்திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய பணத்தை பெற்றுச்செல்வதற்காக வந்திருப்பதாக EFTPOS இயந்திரத்தை காண்பித்த நபர்கள், பணம் செலுத்த மறுத்தால் கைது செய்து அழைத்துச்செல்லப்போவதாகவும் கூறியுள்ளார்கள்.

'AUSTRALIAN FEDERAL POLICE' என்பதற்கு பதிலாக வெறுமனே  'FEDERAL POLICE' என்று எழுதப்பட்டிருந்ததையும், அவர்களது இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த விலங்குகள் போலியானவை என்பதையும் கண்டுபிடித்த வீட்டுக்காரர், அவர்களது அடையாள அட்டையை காண்பித்து பொலீஸார் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, இருவரும் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்கள். வீட்டுக்காரர் உடனடியாக பொலீஸாருக்கு அழைத்து முறைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறார்.

வீட்டுக்கு வந்த இருவரும் இந்திய - ஆசிய நாட்டு தோற்றமுடையவர்கள் என்றும் ஒருவர் 20-களிலும் மற்றையவர் 40-களிலும் மதிக்கக்கூடியவர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் ஆறு மாதங்களாக குடியிருக்கும் குறிப்பிட்ட வீட்டுக்காரர், சில மாதங்களுக்கு முன்னர் அந்தப்பகுதியில் சனத்தொகை மதிப்பீட்டுக்கு தகவல்கள் சேகரிப்பதாக சிலர் காணப்பட்டார்கள் என்று கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now