2019 ஆம் ஆண்டுக்குரிய ஆஸ்திரேலிய பிரபஞ்ச பேரழகிப் போட்டியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ப்ரியா செர்ராவ் வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு மெல்பேர்னில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ப்ரியா அழகியாக முடிசூடியுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியைச் சேர்ந்த ப்ரியா செர்ராவ்(வயது 27) ஆஸ்திரேலியாவுக்கு 11 வயதில் குடிபெயர்வதற்கு முன்னர் துபாயில் குடும்பத்தினரோடு வசித்தவர் ஆவார்.
மெல்பேர்ன் விக்டோரிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டப்படிப்பை நிறைவுசெய்த ப்ரியா, அழகிப்போட்டிகளில் முன்பு கலந்துகொண்ட எந்த அனுபவமும் இல்லாதவர்.
ஆஸ்திரேலிய பிரபஞ்சப் பேரழகி போட்டியில் கலந்துகொண்டது குறித்து அவர் கூறும்போது - தான் நிச்சயம் தெரிவு செய்யப்படப்போவதில்லை என்ற திடமான நம்பிக்கையுடன்- முதல் பத்து அழகிகளில் தானும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டால் மகிழ்ச்சி என்ற எண்ணத்துடனேயே இந்த போட்டியில் கலந்துகொண்டதாக கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தனக்கு கிடைத்துள்ள பெயரைப் பயன்படுத்தி பன்மைத்துவம் மற்றும் பல்கலாச்சார விழுமியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த தான் பாடுபடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரபஞ்சப் பேரழகியாக இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட பெண்ணொருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்போட்டியில் கடந்த ஆண்டு சீன அழகி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
