போர்க்குற்றங்களிலும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்ற வெளிநாட்டுப்படையினருக்கு இராணுவப்பயிற்சிகள் வழங்குவதில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு கவனத்தோடு செயற்படவேண்டும் என்றும் ஆஸ்திரேலியா பயிற்சியளிக்கும் வெளிநாட்டுப்படையினர் தங்களது நாடுகளில் எவ்வாறு அந்த பயிற்சிகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதில் ஆஸ்திரேலியா அவதானங்களை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரிடம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கோரிக்கை விடுத்துள்ளது.
மியான்மாரில் இடம்பெறுகின்ற வன்முறைச்சம்பவங்களில் அரச படையினர் பலர் கொலை - பாலியல் வன்முறைச்சம்வங்களில் ஈடுபட்டுவருகின்றமை பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தாங்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவை தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளிலிருந்து இலகுவாக தப்பிக்கொள்ளமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன்தான் அவர்கள் அந்தக்குற்றங்களை செய்கிறார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் கூறுகையில் -2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதற்கொண்டு மியான்மாரில் அரச படையினர் மேற்கொண்டுவரும் பல்வேறு கொடுஞ்செயல்களினால் 70 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று மியான்மார் அரசபடையின் உயர் அதிகாரிகள் 13 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள். ஆனால், மேலும் பலர் இந்தக்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இவர்களில் ஐந்து படையதிகாரிகள் மீது மாத்திரமே ஆஸ்திரேலியா வருவதற்கான பயணத்தடையை ஆஸ்திரேலிய அரசு விதித்திருக்கிறது. இந்தப்பிரச்சினை மியான்மாரில் மாத்திரமல்ல, பல வெளிநாடுகளிலும் பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட படையினர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்காமலும் பொறுப்புக்கூறாமலுமுள்ளனர்- என்று தெரிவித்துள்ளது.
Share
