ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக அண்ணனும் தங்கையும் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டு குடிவரவுத்திணைக்களத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தெரியவந்துள்ள புதிய சம்பவத்தில் - இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது தங்கையை திருணம் செய்துகொண்டதாக அந்த மாநிலத்தில் பெற்றுக்கொண்ட போலி ஆவணத்தை குடிவரவுத்திணைக்களத்திற்கு சமர்ப்பித்துள்ளதுடன் கடவுச்சீட்டைக்கூட போலியாக பெற்றுக்கொண்டு அதிலும் தாங்கள் இருவரும் கணவன் மனைவி என்ற பதிவுகளை உறுதி செய்யும் வண்ணம் மாற்றங்களை செய்திருக்கிறார் என The Australian செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் பஞ்சாப் மாநிலத்தின் சிற்றூரில் பொலீஸார் மேற்கொண்டவிசாரணைகளில் சுமார் ஆறுபேர் இதுபோன்ற சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் ஆனால், அண்ணன் தங்கையை திருமணம் செய்து வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யும் நடவடிக்கை ஒன்றே ஒன்றுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள இதுபோன்ற மோசடிகள் குறித்து குடிவரவுத்திணைக்களம் முழு அளவிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க கடந்த 2015-2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மணத்துணைக்கான விசாவின் கீழ் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 278 என்றும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு வருடங்களில் இவ்வாறான சுமார் 1500 விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
