நீங்கள் குடிவரவுத் திணைக்களத்தில் விசா எதற்காவது விண்ணப்பித்துவிட்டு, அது கிடைப்பதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவவென குடிவரவுத் திணைக்களம் புதிய முறையொன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
எதிர்வரும் மார்ச் 13ம் திகதி முதல் குடியுரிமை விண்ணப்பங்கள் உட்பட ஏனைய விசா பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது Online-இணையத்தில் வெளியிடப்படுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் வேலைப்பளுவைப் பொறுத்து இது புதுப்பிக்கப்படுமென குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் குடிவரவுத் திணைக்களம் வெளியிடும் கால அவகாசத்திற்குள் உங்கள் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டுமானால் கீழ்க்காணும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
2. குடிவரவுத் திணைக்களம் மேலதிக விபரங்களைக் கோரினால் விரைவாக அவற்றைச் சமர்பிக்க வேண்டும்.
3. ஒவ்வொரு விண்ணப்பம் தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு குடிவரவுத் திணைக்களத்திற்கு வெவ்வேறு கால அவகாசம் தேவைப்படலாம்.
4. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் குடிவரவுத் திட்டத்தின்கீழ் உள்வாங்கப்படுவார்கள் என்பதைப் பொறுத்தும் ஒருவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவது தாமதமாகலாம்.
இதேவேளை புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்ற விபரம் இணையத்தில் வெளியிடப்படுமா என்பது தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் எதுவும் கூறவில்லையாயினும் சில பிரிவுகளின் கீழுள்ள விசா விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது Online-இல் வெளியிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
