ஆஸ்திரேலிய விசா விடயங்களைக் கையாளும் பணியில் குடிவரவுத் திணைக்களத்துடன் தனியார் நிறுவனங்களும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரைகாலமும் ஆஸ்திரேலிய விசா விவகாரங்கள் அனைத்தும் குடிவரவுத் திணைக்களத்தினால் கையாளப்பட்டுவந்த நிலையில், தற்போது நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதனால், இப்பணியில் தனியார் நிறுவனங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக விசா மோசடிகளைக் கண்டுபிடித்தல், பரிசோதனைகளை நிர்வகித்தல் மற்றும் விசாவை வழங்கலாமா இல்லையா என்பது தொடர்பில் பரிந்துரைத்தல் போன்ற பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர குடிவரவுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
எனினும் security assessments, intelligence work, enforcement போன்ற அம்சங்கள் தொடர்ந்தும் குடிவரவுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இதற்கென அடுத்த 10 ஆண்டுகளில் 9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குடிவரவுத் திணைக்களத்தில் 570 பணியிடங்கள் இல்லாமல் செய்யப்படுகின்ற அதேநேரம், இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீடும் 165 மில்லியன் டொலர்களால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், விசா நடைமுறைகளின் பெரும்பகுதி தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், பெருந்தொகை பணத்தை சேமிக்க முடியுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
