குடும்பத்தவர்களின் தொல்லை தாங்க முடியாமல் நாட்டைவிட்டு தப்பி ஆஸ்திரேலியாவை நோக்கி வந்துகொண்டிருந்த சவுதி யுவுதி ஒருவர் தாய்லாந்து விமானநிலையத்தில் வைத்து சவுதி -குவைத் அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
உடல் ரீதியாவும் உள ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்குள்ளான நிலையில் தான் வீட்டையும் நாட்டையும் விட்டு தப்பியோடி வந்ததாகவும் தன்னை பாங்கொக் விமானநிலையத்தில் வைத்து பிடித்த சவுதி அதிகாரிகள் விமானநிலைய அறையொன்றில் தடுத்துவைத்திருப்பதாகவும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.
தான் மீண்டும் சவுதிக்கு கொண்டுசெல்லப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ள குறிப்பிட்ட யுவதி மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவதை தடுத்துநிறுத்துவதற்கு சர்வதேச விழிப்புணர்வைக்கோரி சமூக வலைத்தளங்களிலும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Rahaf Mohammed Multaq al-Qunan என்ற 18 வயதுடைய இந்த யுவதி சவுதியை சேர்ந்த பிரபலமான அரசியல் புள்ளியொருவரின் மகள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர் சவுதியிலிருந்து வெளியேறுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு மூன்று மாத சுற்றுலா விஸா ஒன்றை விண்ணப்பித்து அதற்கு ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அனுமதியும் வழங்கியிருக்கிறது. இதன் பிரகாரம் சவுதியிலிருந்து புறப்பட்டு வந்த Rahaf Mohammed Multaq al-Qunan, பாங்கொக் விமானநிலையத்தில் வந்து இறங்கிய மாத்திரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக இவர் குவைத்தின் ஊடாக சவுதிக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்புத்தெரிவித்த Rahaf Mohammed Multaq al-Qunan மனித உரிமைகள் ஆணையகத்துடன் தொடர்பு கொண்டு ஆறு மாத காலம் வீட்டுக்காவலில் இருந்து தப்பியோடி வந்திருப்பது உட்பட தான் அனுபவித்த பல துன்ப - துயரங்கள் குறித்து எடுத்துக்கூறியுள்ளார்.
ஏற்கனவே ஊடகவியலாளர் ஜமால் கசோஜியின் படுகொலையில் பாரதூரமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சவுதி அரசு, இப்போதும்கூட அதேபாணியிலான நாடு கடந்த கடத்தல் நடவடிக்கைக்கு முயற்சித்திருக்கிறதா என பல மட்டங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
Rahaf Mohammed Multaq al-Qunan மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய தாய்லாந்திலுள்ள ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையகத்தில் (UNHCR) அகதி தஞ்சக்கோரிக்கையை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கொண்டுள்ளது.
