ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சீனர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் தொலைபேசியூடான மோசடி மூலம் இதுவரை பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சனல 7 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மோசடி ஊடாக சுமார் ஒருகோடி டொலர்கள் இனந்தெரியாதவர்களின் கைகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நியூ சவுத் மாநில தொலைபேசி அழைப்பெண்ணிலிருந்து வருகின்ற இந்த அழைப்புக்களில் மாண்டரின் மொழியில் பேசுகின்ற மர்ம நபர்கள், தங்களை சீன தூதரக உத்தியோகத்தர்களாக அல்லது பொலீஸாராக பாவனை செய்து- குறித்த நபர் தவறிழைத்துவிட்டதால் தாங்கள் இந்த அழைப்பை மேற்கொண்டு விசாரிப்பதாக கூறி, வங்கி எண், கடனட்டை எண் மற்றும் தனிபபட்ட விவரங்களை இந்த அழைப்பாளர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.
இப்படியான அழைப்புக்களை மேற்கொண்டவர்களிடம் இதுவரை சுமார் 40 பேர்வரையிலானோர் தங்களது தனிப்பட்ட விவரங்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் இதன்மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடி டொலர்கள் இந்த கும்பலின் கைகளுக்கு சென்றிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இதே பாணியிலான நடவடிக்கை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள சீனர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய பொலீஸார் குறிப்பிட்ட நாடுகளின் புலனாய்வுத்தரப்புக்களுடன் இணைந்து இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேபோன்ற மோசடிகள் அனைத்து இன மக்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
