ஆஸ்திரேலியாவின் பெரு நகரங்களில் நிரம்பி வழியும் சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்காக குடிவரவாளர்களை உள்வாங்கும் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக பிரதமர் Scott Morrison அறிவித்திருந்தாலும், பெருநகரங்களின் சனத்தொகை பருமன் அதிகரிப்பதற்கு வெளிநாட்டு மாணவர்களின் அபரிமிதமான வருகைதான் காரணமே தவிர, குடிவரவாளர்கள் அல்ல என்று குடிவரவுத்துறை முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிட்னி - மெல்பேர்ன் - பிறிஸ்பேன் போன்ற நகரங்களில் நிரம்பி வழிகின்ற சனத்தொகையினால் அந்த மாநிலங்களின் இயல்புவாழ்வு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் போக்குவரத்து - மருத்துவம் - ஏனைய சேவைகள் அனைத்திலும் குறிப்பிட்ட மாநிலங்கள் மிகப்பெரிய தேவைகளை நிறைவேற்றவேண்டியுள்ளதாகவும் பிரதமர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனால், இந்த சனத்தொகைக்கு காரணம் அந்த இடங்களில் வந்து குவிகின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கையை நிறைவு செய்த பின்னர், நிரந்தர பிரஜைகளாக மாறுவதுமே ஆகும் என்று குடிவரவுத்துறை அமைச்சின் முன்னாள் துணைச் செயலர் Abul Rizvi கூறியுள்ளார்.
கடந்த 2012 -13 காலப்பகுதியில் வெறும் 32 ஆயிரமாகவிருந்த வெளிநாட்டு மாணவர்களின் வருகை 2016-17 இல் ஒரு லட்சமாக அதிகரித்திருக்கிறது. மேலும் - 'இந்த மாணவர்கள் நிரந்தர குடிமக்களாக இந்த நாட்டில் குறிப்பாக பெருநகரங்களில் தங்கிவிடுவதுதான் குறிப்பிட்ட இடங்களில் சனத்தொகை நிரம்பி வழிவதற்கான காரணம் என்ற யதார்த்தத்தை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆண்டுதோறும் வருகின்ற குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பெரியளவில் மாறவில்லை. ஆகவே, அந்த எண்ணிக்கையில் மாற்றத்தைக்கொண்டுவருவதன் மூலம் சனத்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படப்போவதில்லை'- என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share
