ஆஸ்திரேலியாவில் இறப்பவர்களுக்கான மரணச்செலவுகள் தொடர்பில் மாநில ரீதியான ஆய்வொன்றினை finder.com.au என்ற இணையத்தளம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் பிரகாரம், இறுதி நிகழ்வுகளுக்கான செலவு அதிகமுள்ள மாநிலம் நியூ சவுத் வேல்ஸ் என்று அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சிட்னியில் ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி நிகழ்வுகளை நடத்துவதுற்கு சராசரியாக $8,357 செலவாகிறது என்று இந்த ஆய்வில் அறியப்படுகிறது என்றும் இந்த செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்து சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கு அடுத்ததாக பேர்த்தில் இறுதி நிகழ்வு செலவு ஒருவருக்கு $7,584 என்றும் பிறிஸ்பெனில் $7,505 செலவாகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மெல்பேர்ன் மற்றும் டார்வின் ஆகிய இடங்களில் சராசரி மரண வீட்டு செலவு குறித்த விவரங்களை இந்த இணையத்தளம் வெளியிடவில்லை.
ஆனால், கடந்த ஆண்டு மெல்பேர்னில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஒருவருக்கான இறுதி நிகழ்வு செலவு $7,586 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது - ஆஸ்திரேலியாவில் இறப்பவர்களில் 40 வீதமாவனர் தாங்கள் இறப்பதற்கு முன்னர் தங்களின் இறுதி நிகழ்வுக்கான செலவுகளை ஒழுங்கு செய்துவிடுகிறார்கள். அந்த ஒழுங்குமுறை தங்களது சொந்த சேமிப்பு மூலமாகவோ காப்புறுதி மூலமாகவோ ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், திடீரென்று இடம்பெறும் மரணங்கள் மற்றும் இறுதி நிகழ்வுகளுக்கான நிதி ஏற்பாடுகளை முன்னரே ஒழுங்கு செய்யாதவர்களினால் அவர்களது உறவினர்கள்தான் பாரிய செலவுகளை சுமக்கவேண்டியுள்ளது. இறுதி நிகழ்வுகளுக்கான செலவுகளை குறைப்பதற்கு முடியுமானவரையில் முன்னாயத்த சேமிப்புக்களை ஒழுங்கு செய்துவைத்திருப்பதற்கு அப்பால், மெழுகுவர்த்தி - பூக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஆடம்பரமான நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதிலிருந்து தவிர்த்துக்கொண்டாலே செலவுகளை கட்டுப்படுத்தலாம். அத்துடன், இறுதி நிகழ்வுகளை நடத்தும் பல்வேறு அமைப்புக்களிடம் பேசிவிட்டு ஒரு முடிவுக்கு வருவதும்கூட செலவுகளை கட்டுப்படுத்துதற்கு உகந்த வழி. - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
