ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மிகப்பெரிய சம்பளச்சுரண்டலுக்கு உள்ளாவதாக சுயாதீன அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது.
வெளிநாட்டு மாணவர்கள், பழத்தோட்டங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பலரிடம் இவ்வாறான வேதனச்சுரண்டல் இடம்பெறுவதாக குறிப்பிட்ட கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
''Wage Theft in Silence” என்ற இந்த கருத்துக்கணிப்பு சுமார் 13 மொழிகளில் நடத்தப்பட்டிருந்தது. கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 107 நாடுகளை சேர்ந்த சுமார் 4,322 பேர் தங்களது அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
இந்தக்கருத்துக்கணிப்பின்படி, ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தற்காலிக வேலையாட்களில் மூவரில் ஒருவர் 12 டொலர்களுக்கும் குறைவான வேதனத்தை பெறுகிறார்கள் என்றும், இந்தத்தொகையானது அவர்களுக்கு செலுத்தவேண்டிய சம்பளத்தின் அரைவாசியிலும் குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கள் பிடுங்குவதற்காக பணிக்கு அமர்த்தப்படுகின்ற தற்காலிக வேலையாட்களின் சம்பளத்தில்தான் மிகப்பயங்கரமான வேதனத்திருட்டு இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ள Wage Theft in Silence கருத்துக்கணிப்பு, பண்ணைகளில் பணிபுரியும் இந்தப்பணியாளர்களில் 15 வீதமானவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 5 டொலர்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றது என்றும் 31 வீதமானவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 10 டொலர்கள் வேதனமாக கொடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்காலிக பணியாளர்களில் மேற்கொள்ளப்படும் இந்த சம்பளச்சுரண்டலின் மூலம் வேலை வழங்கும் நிறுவனங்கள் பலகோடி டொலர்களை கொள்ளையடிக்கின்றன என்றும் இவை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் பெரும்பாலும் விசாரிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதனச்சுரண்டலுக்கு உள்ளாகும்வேலையாட்களும் நூறுபேரில் மூவர் என்ற வீதத்தில்தான் தங்களுக்கு இடம்பெற்றுவருகின்ற அநீதி குறித்து முறைப்பாடு செய்கிறார்கள். இவர்களில் அரைவாசிப்பேருக்கு நீதி கிடைப்பதேயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
