SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் கொள்முதல் செய்த 500 கறவை மாடுகள் இலங்கையில் பலி!

CATTLE IN STOCKYARD
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பால் மா இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து கறவை மாடுகளை கொள்வனவு செய்யும் மிகப்பெரிய திட்டமொன்றின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐயாயிரம் பசுக்களில் ஐநூறு பசுக்கள் இறந்துபோயுள்ளதாக ABC ஊடகம் தெரிவித்துள்ளது.

இதனால் மாடுகளை தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் கொள்முதல் செய்த பண்ணையாளர்கள் பலத்த நட்டமடைந்துள்ள அதேநேரம் வாங்கிய பசுக்களில் பெரும்பாலானவை இறந்துபோன காரணத்தினால் வியாபாரம் நட்டமடைந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து ஆஸ்திரேலியாவின் ABC ஊடகம் மேற்கொண்டுள்ள முழுமையான ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன.

இலங்கையின் பால் மா இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு, வடக்கு ஆஸ்திரேலிய கம்பனி ஒன்றுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 2012 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில் 20 ஆயிரம் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து  கறவை மாடுகளை இறக்குமதி செய்துகொள்வது என்று இலங்கை வர்த்த அமைச்சு தீர்மானித்தது.

அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் பிரகாரம் முதல்கட்டமாக சுமார் ஐயாயிரம் பசுமாடுகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த பசுமாடு ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 20 லீட்டர் பால் தரக்கூடியவை என்று உறுதியளிக்கப்பட்டு இலங்கையிலுள்ள பால் பண்ணையாளர்களுக்கு விற்கப்பட்டது.

பசு ஒன்றின் விலை இரண்டு லட்சம் ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டபோதும் ஆஸ்திரேலிய பசுக்கள் என்ற தரத்துக்காகவே பெருமளவிலான உள்ளுர் பண்ணையாளர்கள் இவற்றை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்தனர்.

ஆனால், கொள்முதல் செய்து கொஞ்ச காலத்திலேயே இந்த பசுக்கள் இறக்கத்தொடங்கியுள்ளன. இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஐநூறு பசுக்கள் இறந்துவிட்டதாக ABC மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தத்தொடர் இறப்பினால், பசுக்களை கொள்முதல் செய்த பண்ணையாளர்களுக்கு பெரும் ஏமாற்றமும் அதற்கு மேலதிகமாக விரக்தியும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நட்டம் குறித்து கூறும்போது - ஆஸ்திரேலிய பசுக்களை வாங்கியதால் தாங்கள் பண்ணைத்தொழிலை கைவிட்டு தற்போது சுடலைத்தொழில்தான் செய்துவருவதாக கூறியிருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்ட மாடுகளை தங்களுக்கு விற்பனை செய்து ஏமாற்றிவிட்டார்கள் என்று சீற்றமடைந்திருக்கிறார்கள்.

ஆனால், மாடுகளை விற்பனை செய்த வடக்கு ஆஸ்திரேலிய கம்பனி இது குறித்து கூறும்போது, குறிப்பிட்ட பசுக்கள் எந்த வியாதியுமற்றவை என்று இலங்கை தரப்பினர் மருத்துவ சோதனைகள் மேற்கொண்டபின்னரே கொள்முதல் செய்துகொண்டார்கள். ஆனால், இன்னொரு நாட்டின் சுவாத்தியத்துக்கு ஏற்றவாறான பசுவளர்ப்பு படிமுறைகளை பண்ணையாளர்கள் பின்பற்றாத காரணத்தினால்தான் இந்த இறப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த இறப்புக்கூட எல்லா பண்ணையாளர்களுக்கும் ஏற்படவில்லை என்றும் வாங்கிய பலரில் 68 பேருக்கு மாத்திரமே இடம்பெற்றிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இந்த ஒட்டுமொத்த பிரச்சினையின் விளைவாக, மேலதிகமாக இறக்குமதி செய்யப்படவுள்ள பசுக்களை தங்களுக்கு அனுப்பவேண்டாம் என்றும் ஒப்பந்தத்தை ரத்துச்செய்துவிட்டு மாடுகளின் இறப்பினால் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குமாறு இலங்கை பண்ணையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now