நெருக்கடியில் சிக்கியுள்ள நகரங்கள், நிரம்பி வழிகின்ற பொதுப்போக்குவரத்து என்று பல்வேறு சிக்கல்களைக் கருத்திற்கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
புதிய குடிவரவுக்கொள்கையின் கீழ் வருடமொன்றுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம் பேரினால் குறைக்கப்படலாம் என பிரதமர் கூறியுள்ளார்.
நேற்றிரவு சிட்னியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குடிவரவாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும்படி தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகளுக்கான காரணங்களை தான் ஆராய்ந்ததாகவும் அவற்றின் பிரகாரம் செயலாற்றவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய குடிவரவுக்கொள்கையின்படி வருடமொன்றுக்கு 190 ஆயிரம் குடிவரவாளர்களை ஏற்றுக்கொள்வது என்பது தேசிய முடிவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலிய மாநிலங்களின் தலைவர்களின் முழுமையான ஆய்வின் பிரகாரம் நாட்டின் தேசிய குடிவரவுக்கொள்கைகளை இனிமேல் நடைமுறைப்படுத்தப்போவதாகவும் கன்பராவிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களை நாட்டின் சகல மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற முந்தைய நடைமுறை இனி சரிவராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
