அநாமதேய அழைப்புக்களை மேற்கொண்டு தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பணக்கொள்ளையில் ஈடுபடும் கும்பல்களினால் ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாத்தில் மாத்திரம் சுமார் எட்டு லட்சம் டொலர்கள் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்துக்கு நவம்பர் மாதம் மாத்திரம் இப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து சுமார் 37 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த மெகா கொள்ளையின்போது, ஒருவரிடம் மாத்திரம் இரண்டு லட்சத்து 36 ஆயிரம் டொலர்கள் திருடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் வரித்திணைக்களத்தின் பேரில் தொலைபேசிகளின் மூலம் சுமார் ஆறாயிரம் பேரிடம் தனிப்பட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ள வரித்திணைக்களம், தாங்கள் ஒருபோதும் தொலைபேசியின் வழியாகவோ மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களின் ஊடாகவோ தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்வதில்லை என்றும் அவ்வாறான அழைப்புக்களை மேற்கொள்பவர்களிடம் ஏமாறவேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.
Share
