ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியம் எனப்படுவது ஆஸ்திரேலிய குடியுரிமையுடைய (Australian citizen) முதியவர்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. ஆஸ்திரேலிய நிரந்தர விதிவிட உரிமை (permanent residency) உடையவர்களுக்கும் கிடைக்கக்கூடியது.
அண்மையில், ஓய்வூதிய வயதெல்லை மாற்றப்பட்டிருப்பதை தொடர்ந்து இது விடயத்தில் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து குடிவரவு சட்டத்துறை வட்டாரங்கள் ஞாபகமூட்டியிருக்கின்றன.
ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை உடைய முதியவர்கள் (Australian PR holders) முறையான விண்ணப்பங்களை வழங்கி அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானவை என்று கருதப்பட்டால், தனியொருவருக்கு இரண்டுவாரங்களுக்கு ஒருதடவை 926.20 டொலர்களும் தம்பதிகளானால் ஒவ்வொருவருக்கும் இரண்டுவாரங்களுக்கு ஒரு தடவை 698.10 டொலர்களும் கிடைக்கும்.
ஆனால், இந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் எந்தவகையில் தகுதி பெறவேண்டும் என்ற விவரங்கள் வருமாறு:
1953 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியில் அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்கவேண்டும். (66 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும். இந்த வயது மாற்றம் கடந்த ஜூலை மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது)
ஓய்வூதிய வயதெல்லை அடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் - 13 வாரங்களுக்கு முன்னர் - தங்களது தகுதிநிலை குறித்து DHS (Department of Human Services) இடத்தில் அறிவிக்கவேண்டும்.
ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கின்றவர்கள் 10 வருடங்கள் ஆஸ்திரேலியாவில் வசித்திருக்கவேண்டும். இவற்றில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் வசித்திருக்கவேண்டும்.
ஓய்வூதிய விண்ணப்பத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து விண்ணப்பித்திருக்கவேண்டும். விண்ணப்பத்தை தாக்கல் செய்துவிட்டு, வெளிநாடு சென்றுவிடவோ, அல்லது வெளிநாட்டிலிருந்துகொண்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்யவோ முடியாது.
