ஆஸ்திரேலியாவுக்குள் முஸ்லிம் மக்கள் குடியேறுவதைத் தடை செய்வதுடன், இது தொடர்பில் அரசாங்கம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று குயின்ஸ்லாந்து செனட்டர் Fraser Anning தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
பிரதமர் Malcolm Turnbull முதலான பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட செனட்டரின் கருத்தினை முற்றாக மறுதலித்திருக்கிறார்கள்.
Katter’s Australia party செனட்டர் Fraser Anning, தனது கன்னி உரையில் மேலும் கூறும்போது - பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் கடின உழைப்பாளிகளாகவும் சட்டத்தை மதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். என்றாலும் குறைந்த பகுதியினர் எந்த வேலையும் செய்யாமல் இந்த நாட்டுக்கு சுமையாக உள்ளார்கள். எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தான். இப்படிப்பட்டவர்களை நாங்கள் குடியேற்றவாசிகளாக ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை மக்கள் தரப்பிலிருந்து முடிவெடுக்கவேண்டும் - என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்திற்கான இறுதி தீர்வு-Final solution, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வசனம் பல்வேறு தரப்பிலும் பல உணர்வுபூர்வமான சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. ஏனெனில், குடியேற்றவாசிகளுக்கு எதிரான இறுதி தீர்வு-Final solution என்ற வசனம் ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த யூதர்களுக்கு எதிராக நாஸிக்களினால் பயன்படுத்தப்பட்ட பிரபலமான இனவாத கருத்தாகும்.
குறிப்பிட்ட குயின்ஸ்லாந்து செனட்டர் இது தொடர்பில் கூறுகையில் - தனது கருத்து திரிபுபடுத்தப்பட்டு தன் மீது அவதூறு சுமத்தப்பட்டுவருவது குறித்து தனக்கு கவலை இல்லை என்றும், முஸ்லிம் மக்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் கருத்து வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும்- கூறியுள்ளார்.
