ஆஸ்திரேலியாவில் skilled மற்றும் குடும்ப விசா அடிப்படையில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்வுகூறப்பட்டதைப் போலவே இவ்வருடம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வருடமொன்றிற்கு 190,000 பேர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படும் நிலையில், அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான விசா பரிசீலனை நடைமுறைகளால், இவ்வருடம் ஏப்ரல் 30ம் திகதி வரை 138,086 பேருக்கே விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் அதிகாரி செனற் விசாரணைக் குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் 2016- 2017 வரையான காலப்பகுதியில் 183,608 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே அரசு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு சுமார் இருபதாயிரத்தால் குறைக்கவுள்ளமை உறுதியாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களால், ஏற்கனவே இங்கு பிறந்த ஆஸ்திரேலியர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதுடன், குடியேற்றவாசிகள் இங்குள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பினை அபகரிக்கவில்லை என அண்மையில் Treasury & Home Affairs இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவித்துள்ள பின்னணியில் அரசு இவ்வாறு விசா எண்ணிக்கையைக் குறைப்பது ஏன் என பல்வேறு தரப்பினராலும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
