தகப்பனின் சுகவீனம் காரணமாக தனது குடும்பத்தினரை ஆஸ்திரேலிய அரசு நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறும் தமிழ் யுவதி அதனை தடுப்பதற்கு பொதுமக்கள் ஆதரவைக்கோரி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த வாணிசிறி ராஜசேகரன் என்ற 18 வயது யுவதி விடுத்துள்ள இந்த வேண்டுகோளில், தான் மருத்துவம் அல்லது சட்டத்துறையில் பயின்று ஆஸ்திரேலிய சமூகத்துக்கு உதவி செய்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாகவும் ஆனால், தமது குடும்பத்தினரின் விசாவை நிராகரித்து இன்னும் மூன்று கிழமைகளில் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்புவதற்கு ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சு முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தாய், தகப்பன் மற்றும் தனது தம்பியுடன் இந்த நாட்டுக்கு வந்த வாணிசிறி கடந்த ஆறுவருடங்களாக சிறந்த மாணவியாகவும் பலதுறைகளில் தேர்ச்சி மிக்கவராகவும் மிளிர்ந்துள்ளார்.
மெல்பேர்ன் தென்மேற்கு புறநகரான Warrnambool பகுதியில் வாழ்ந்துவரும் வாணிசிறியின் குடும்பத்தினர் சமூகத்துக்கு முன்னுதாரணம் மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர்.
வாணிசிறியின் குடும்பம் நிரந்தர வதிவிட உரிமைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வாணிசிறியின் தந்தைக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்ததையடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
28 நாட்கள் காலக்கெடு வழங்கியிருக்கும் குடிவரவு அமைச்சின் அறிவிப்பின்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி இவர்கள் சிங்கப்பூருக்கு திரும்பி செல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்.
வாணிசிறி எதிர்வரும் உயர்கல்விப்பரீட்சையில் தோற்றவுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் நாடுகடத்தப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நாடுகடத்தலை தடுக்குமாறு பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள வாணிசிறி, கையெழுத்துப்போராட்டங்கள் மூலம் அரசின் மனதை மாற்றி தங்கள் குடும்பத்தின் கடைசிநேர கோரிக்கையை நிறைவேற்றுமாறு வேண்டியிருக்கிறார்.
