SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய நிஸாம்டீன் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாடு

Nizamdeen
Source: Facebook

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய பொலீஸார் தன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டினை சுமத்தி கைது செய்து ஒரு மாத காலம் சிறையிலடைத்து விசாரித்தமுறையானது பொறுப்பில்லாததும் முதிர்ச்சியற்றதும் வெட்கக்கேடானதும் ஆகும் என்று நிஸாம்டீன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிஸாம்டீன் அண்மையில் சிறிலங்காவுக்கு திரும்பியிருந்தார்.ஆஸ்திரேலியாவில் தனக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்தார். அங்கு பேசும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கும்போது - “என்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்கு எனக்கு எந்தப்பின்னணியோ செல்வாக்கோ இல்லை என்று ஆஸ்திரேலிய பொலீஸார் தவறாக கணிப்பிட்டுவிட்டார்கள். ஆனால், ஆஸ்திரேலிய பொலீஸாரிலிருந்து சுதந்திரமாக இயங்கும் ஆஸ்திரேலிய நீதித்துறையை நம்பினேன். நியூசவுத் வேல்ஸ் மாநில பல்கலைக்கழகத்திலுள்ள அலுவலகத்தின் ஒரு அறையிலிருந்து எடுக்கப்பட்ட நோட் புத்தகத்தின் அடிப்படையிலேயே நான் கைது செய்யப்பட்டேன். என்னை கைது செய்த பொலீஸாரிடம் அந்த நோட் புத்தகமும் அதிலுள்ள கையெழுத்தும் என்னுடையது அல்ல என்று திரும்ப திரும்ப கூறினேன். ஒரு மாத காலமாக அந்த அலுவலகப்பக்கமே நான் போகவில்லை என்பதையும்கூட அவர்களிடம் எடுத்துக்கூறினேன். ஆனால், பொலீஸாரோ சுமார் எட்டு மணிநேரம் என்னை விசாரித்துவிட்டு, நடைமுறையிலுள்ள தங்களின் கொடூரமான சட்டத்தின் அடிப்படையில் என்னை குற்றவாளியாக முத்திரை குத்துவதற்கு போதும் என்று எண்ணினார்கள். இந்த விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஆறு நாட்களாக நான் சட்ட ஆலோசகர்களுடனோ எவருடனும் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இது அப்பட்டமான அடிப்படை உரிமை மீறல் ஆகும். நான் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் - ஒரு மாத காலத்துக்குப்பிறகுதான் குடும்பத்தினருடன் பேச முடிந்தது. எனது எதிர்காலம் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்ட நிலையில் நான் தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளேன். ஊடகங்களும் சிறிலங்கா மக்களும்தான் தொலைந்துபோன வாழ்விலிருந்து என்னை மீட்கவேண்டும். இவ்வளவுக்கும் காரணமான ஆஸ்திரேலிய பொலீஸார் தாங்கள் செய்த இந்தக்காரியத்துக்கு என்னிடம் எந்த மன்னிப்பும் கோரவில்லை. பதிலாக, விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்“- என்று அவர் கூறினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now