ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து அகதிகளாக தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 311 வீதத்தினால் அதிகரித்திருப்பதாக அறியவந்திருக்கிறது.
2016 - 17 காலப்பகுதியில் 2269 பேர் என்ற நிலையிலிருந்த ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சீனர்களின் எண்ணிக்கை 2017 -18 இல் 9315 என்று தீடீரென்று அதிகரித்துள்ளதாக குடிவரவுத்திணைக்கள தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து தஞ்சம் கோரும் இப்படியான அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளும் வீதம் மிகக்குறைவாக உள்ளபோதும் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் குடிவரவு திணைக்களத்தில் குவிந்தவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனத்தஞ்சக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களில் பத்து சதவீதமானவைதான் உண்மையான காரணமுடையவையாக குடிவரவுத்திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோதும் நிராகரிக்கப்படுகின்ற விண்ணப்பதாரிகளில் 25 வீதமானவர்கள் மேல் முறையீடு செய்வதாகவும் அவற்றில் ஐந்து சதவீதமானவர்கள் தங்களது மேன்முறையீட்டில் வெற்றிபெற்றுவிடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது .
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்கள் இவ்வாறு தஞ்சம்கோருவது அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 32 பில்லியன் டொலர் வருட வருமானத்தை ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்குள் இறைத்துவரும் வெளிநாட்டு மாணவர்களின் தற்போதைய எண்ணிக்கை கிட்டத்தட்ட ஏழரை லட்சமாகும். இவர்களில் கிட்டத்தட்ட 30 வீதமானவர்கள் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
