SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதி கோரும் தமிழ்க்குடும்பத்தின் போராட்டம் தொடர்கிறது!

Nadesalingam, Priya, Dharuniga (9 months), and Gopiga (2yrs)
Nadesalingam, Priya, Dharuniga (9 months), and Gopiga (2yrs) Source: Supplied

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நாடுகடத்தப்படவுள்ள நிலையில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மெல்பேர்ன் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம், தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நாளை மீண்டும் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த 2 வயது மற்றும் 1 வயதுடைய பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் இவ்வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது .

கடந்த மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 150 நாட்களுக்கும் மேலாக மெல்பேர்னிலுள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிப்பதாக கடந்த ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் Circuit நீதிமன்றம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அதன் மீதான தீர்ப்பு வழங்கப்படும்வரை இவர்களை நாடுகடத்தக்கூடாதெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மெல்பேர்ன் பெடரல் நீதிமன்றம் கடந்த ஜுன் 25ம் திகதி இதற்கு அனுமதி வழங்கியது. இதன்மூலம் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

இந்தப்பின்னணியில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம், தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரும் மேன்முறையீட்டு மனுவை நாளை மெல்பேர்ன் பெடரல் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now