'ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் தினமும் 80 பேர் புகலிடம் கோருகின்றனர்'

Passengers walk to their flights at Sydney International Airport

File image Source: AAP

ஆஸ்திரேலியாவின் சர்வதேச விமானநிலையங்களில் கடந்த ஜுலை மாதம் முதல் தினமும் 80 பேர் வந்திறங்கி அகதிகளாக தஞ்சம் கோருகிறார்கள் என்றும்  கடந்த ஐந்து வருடங்களில் 95 ஆயிரம் பேர் இவ்வாறு ஆஸ்திரேலியாவில் வந்து இறங்கியுள்ளார்கள் என்றும் புள்ளி விவரங்களுடன் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் Kristina Keneally.

ஆஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக வருகின்ற அகதிகளை நிறுத்திவிட்டதாகவும் அதற்காக தனது அமைச்சு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் நாட்டு மக்களை நம்பவைத்துக்கொண்டிருக்கும் லிபரல் ஆட்சிக்காலத்தில் இவ்வளவுபெரியதொரு அகதிகளின் வருகை விமானங்களின் மூலம் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்- இதற்கு அமைச்சர் பீற்றர் டட்டன் என்ன காரணம் சொல்லப்போகிறார் என்று கேட்கவேண்டும் என Kristina Keneally கூறினார்.

2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதிவரையான லேபரின் ஆட்சியின்போது 51 ஆயிரம் அகதிகள் படகு மூலம் வந்தார்கள் என்பதை மிகப்பெரிய பிரச்சாரமாக மேற்கொண்டுவருகின்ற லிபரல் கட்சியினர், தங்களது ஐந்து வருட ஆட்சியில் விமானங்களில் வந்திறங்கியுள்ள 95 ஆயிரம் அகதிகள் குறித்து இரகசியமாக இருப்பதன் பின்னணியை மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று Kristina Keneally தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான ஒரு வருட காலப்பகுதியில் விமானத்தில் வந்திறங்கி அகதிகளாக தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 520 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now