ஆஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 18ம் திகதி இடம்பெறும் என்று பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.
இன்றுகாலை 7 மணியளவில் ஆளுனர் நாயகத்துடன் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் பிரதமர் Scott Morrison இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கடந்த 45 ஆவது நாடாளுமன்றம் மிகவும் விசித்திரமானதொன்றாக நடைபெற்று முடிந்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 45 ஆவது நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பலர், கடந்த மூன்று வருட காலத்தில் பதவியை இராஜினாமா செய்தார்கள். பலரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரட்டை குடியுரிமை விவகாரத்தினால் செல்லுபடியாகாது என்று நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டார்கள். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்த கட்சியுடனேயே முரண்டுபட்டுக்கொண்டு சுயாதீன உறுப்பினர்களாக மாறிக்கொண்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் Malcolm Turnbull தலைமைத்துவ சவால் விவகாரத்தையடுத்து பதவியை இராஜினாமா செய்துகொண்டது மாத்திரமல்லாமல், அரசியலையே விட்டு வெளியேறினார். அவரது இடத்துக்கு வந்த பிரதமர் Scott Morrison கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் அரசாங்கத்தினை நடத்தி வந்தார்.
நாட்டின் சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ள மேலதிகமான ஒரு ஆசனத்துடன் சேர்த்து 151 ஆசனங்களுக்கான வாக்களிப்பு இம்முறை தேர்தலில் இடம்பெறவுள்ளது.
