ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகையில் 30 வீதமானவர்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என கடந்தவருடம் மேற்கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகவைத்து சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சனத்தொகையில் 18 மில்லியன் பேர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் என்றும் 7 மில்லியன் மாத்திரமே வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்றும் அதிலும் கிட்டத்தட்ட ஒருமில்லியன் மக்கள் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்றும் இந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்துக்கு அடுத்ததாக சீனர்களே அதிகம் பேர் ஆஸ்திரேலியாவில் உள்ளார்கள் என்றும் கடந்த வருடம் வரையான அவர்களது எண்ணிக்கை ஆறு லட்சத்து 51 ஆயிரம் பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள அதிக எண்ணிக்கையான இங்கிலாந்து நாட்டவர்கள் சனத்தொகையில் நான்கு சதவீதமானவர்களாக உள்ளபோது சீனர்கள் 2.6 வீதமானவர்களாக உள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாடுகளுக்கு அடுத்த நிலையில் முறையே இந்தியா, நியூஸிலாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம், தென்னபிரிக்கா, இத்தாலி, மலேசியா போன்ற நாடுகளில் பிறந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக ஐந்து லட்சத்து 26 ஆயிரம் வெளிநாட்டவர்கள் குடியேற்றவாசிகளாக வந்திருக்கிறார்கள். அதுவேளை, இரண்டு லட்சத்து 37 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் என்றும் அந்த தகவல் சுட்டிக்காட்டியிருக்கிறது.
