ஆஸ்திரேலிய ஆளுனர் நாயகம்—Governor general Peter Cosgrove, எதிர்வரும் மார்ச் மாத்துடன் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள பின்னணியில் இவரது பதவிக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop நியமிக்கப்படலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது.
தனது ஐந்து வருட பதவிக்காலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவு செய்யும் Peter Cosgrove, ஓய்வுபெறும் காலத்தை நெருங்கினாலும் அவரது பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் Bill Shorten பிரதமர் Scott Morrison-இடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவ்வாறு பதவி நீடிப்பு செய்யப்பட்டால், அவரது பதவிக்காலம் தேர்தலுக்கு பின்னர் நிறைவுக்கு வரும். தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றால் பிரதமர் பதவியைப்பெற்றுக்கொள்ளும் Bill Shorten தனக்கு விருப்பமான நபரை - தனக்குரிய பதவி வழி அதிகாரத்தின் பிரகாரம் - ஆளுனர் நாயகமாக நியமிக்கலாம் என்று விரும்பியிருந்தார் என சொல்லப்படுகிறது.
ஆனால், தேர்தலுக்கு முன்னதாகவே தற்போதைய ஆளுனர் நாயகத்தின் ஓய்வினை ஏற்றுக்கொண்டால் தொடர்ந்தும் லிபரல் கட்சி சார்ந்த ஒருவரையே அந்தப்பதவிக்கு நியமிக்கலாம் என்பதால் தற்போதைய ஆளுனர் நாயகத்தின் மார்ச் மாத ஓய்வினை ஏற்றுக்கொள்ளும் பிரதமர் Scott Morrison இந்தப்பதவிக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop-ஐ நியமிக்க தீர்மானித்திருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.
