ஆஸ்திரேலிய பாராளுமன்றம் இரு அவைகளக் கொண்டது: ஒன்று 'மக்கள் பிரதிநிதிகள் சபை' அல்லது 'கீழ்ச்சபை' (House of Representatives or Lower House); மற்றையது 'செனட் சபை' அல்லது 'மேல் சபை' ( Senate or Upper House).
'மக்கள் பிரதிநிதிகள் சபை' யின் ஆயுட்காலம் அதிக பட்சம் 3 வருடங்கள் 3 மாதங்கள். ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் 150 உறுப்பினர்கள் இந்த அவைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். ஒரு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது இறந்தாலோ, அந்தந் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
தற்போது கீழ்ச்சபையில் உள்ள ஆசனங்களின் எண்ணிக்கை 150 ஆகும். 2001 இல் இது 125 ஆக இருந்தது. தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும் போது (Electoral Re-distribution) இந்த எண்ணிக்கை மாறும்.
பொதுத்தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சியை ஆட்சி அமைக்கும்படி கவர்னர் ஜனரல் அழைப்பு விடுப்பார். அக்கட்சித்தலைவர் பிரதமராகப் பொறுப்பேற்று தனது அமைச்சரவையை அறிவிப்பார். இரண்டாவது பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பார்.
மக்கள்பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்கள் பல நாடுகளில் 'simple majority' - சாதாரண பெரும்பான்மை என்ற முறையிலேயே நடத்தப்படுகின்றன. இந்த உதாரணத்தைப்பார்ப்போம். இந்தத் தொகுதியில் 100 வாக்காளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
வேட்பாளர் A பெற்ற வாக்குகள் : 35
வேட்பாளர் B. பெற்ற வாக்குகள் : 25
வேட்பாளர் C. பெற்ற வாக்குகள் : 40
Simple majority என்ற அடிப்படையில் 40 வாக்குகளைப் பெற்ற C வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இதிலுள்ள பிரதான குறைபாடு என்னவென்றால், அந்தத் த்தொகுதியிலுள்ள பெரும்பான்மையினர் (60 பேர்) அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதுதான்.
இதைச்சரிசெய்யுமுகமாகவே எமது நாட்டில் preferential voting - விருப்பு வாக்கு முறை பின்பற்றப்படுகிறது. இதன்மூலமாக absolute majority- அறுதிப்பெரும்பான்மை பெறப்படுகிறது. அயர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது.
இந்த முறையின்படி வாக்குச்சீட்டில் (மேலே சொன்ன அதே தேர்தல் தொகுதி, அதே எண்ணிக்கையில் வேட்பாளர்கள், அதே எண்ணிக்கையில் வாக்காளர்கள் ) மூன்று வேட்பாளர்களின் பெயரும் இருக்கும்; அந்த மூன்று பேருள் உங்கள் முதலாவது தெரிவு யார், இரண்டாவது தெரிவு யார், மூன்றாவது தெரிவு யார் என்று நீங்கள் இலக்கமிடவேண்டும்.
வாக்கு எண்ணப்படும்போது, முதல் சுற்றில், simple majority முறையில் வாக்கு எண்ணப்படுவதுபோலவே வாக்குகள் எண்ணப்படும். யாராவது ஒரு வேட்பாளரை முதலாவது தெரிவாக 50% அதிகமான வாக்காளர்கள் தெரிவு செய்திருந்தால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இரண்டாவது சுற்றுக்குச் செல்லவேண்டிய தேவையில்லை.
முதல் சுற்றில் நிலவரம் இப்படி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
A யை முதலாவது தெரிவாகத் தெரிவு செய்தவர்கள்: 40 பேர்.
B யை " " : 35 பேர்.
C யை " " : 25 பேர்.
எந்த ஒரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை பெறாத படியால், இரண்டாம் சுற்றுக்கு செல்லவேண்டும். இப்போது, மூவருள் ஆக க்குறைவான வாக்குகளைப்பெற்ற C போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால், C க்கு வாக்களித்தவர்களுள்(25) எத்தனை பேர் இரண்டாவது தெரிவாக A யையும் B யையும் தெரிவு செய்திருக்கிறார்கள் என்று இப்போது பார்க்கப்படும். Cக்கு வாக்களித்தவர்களுள் 12 பேர் Aயை இரண்டாவதாகத் தெரிவு செய்திருக்கிறார்கள்; 13 பேர் Bயைத் தெரிவு செய்திருக்கிறார்கள். இந்தவாக்குகள் அப்படியே Aக்கும் B க்கும் போய்ச்சேரும்.
இப்போது:
A பெற்ற வாக்குகள் (40+12) : 52
B. பெற்ற வாக்குகள் (35+13) : 48
இதன்படி A வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த அடிப்படையிலேயே 'விருப்பு வாக்கு' முறை நடத்தப்படுகிறது. விருப்பு வாக்கு முறை சிக்கலானது, வாக்கு எண்ணுவதற்கு நீண்டநேரம் எடுக்கும் என்பது போன்ற பிரச்சனைகள் இருப்பினும், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுள் பெரும்பான்மை வாக்காளர்கள் ஆதரிக்கும் அல்லது எதிர்பைத்தெரிவிக்காத வேட்பாளர் தெரிவு செய்யப்படுவது சாத்தியமாகிறது.
