ஆஸ்திரேலிய அரசியலில் உள்ள 'இனவாதக்கட்சிகள்' என்று கருதப்படுபவற்றில் ஒன்றான Fraser Anning's Conservative National கட்சியின் சார்பில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி இந்தியர் ஒருவர் போட்டியிடுகிறார்.
அடிலெய்ட்டின் Hindmarsh தொகுதியில் போட்டியிடுகின்ற Rajan Vaid என்ற இந்த வேட்பாளர் பஞ்சாப்பை பூர்வீகமாகக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அரசியலில் சர்ச்சைக்குரிய நபராக கருதப்படும் Fraser Anning, அண்மையில் நியூசிலாந்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் - அதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று கருத்துவெளியிட்டு 17 வயது இளைஞனால் முட்டைத்தாக்குதலுக்கு உள்ளானவர். அதன் பின்னர், அவரை செனட் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டிருந்தது.
குடியேற்றவாசிகளுக்கு எதிரான மூர்க்கமாக அரசியல் கொள்கையை உடைய Fraser Anning-இன் சுயேட்சைக்குழுவில் இணைந்து இந்தியர் ஒருவர் போட்டியிடுகின்றமை பல்வேறு மட்டத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Fraser Anning-இன் கட்சியில் போட்டியிடும் Rajan Vaid, 2007-இல் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்.
இவர் தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து கூறும்போது - ஆஸ்திரேலியா இனிவரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான குடிவரவாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை நிறுத்தவேண்டும் என்றும் நாட்டின் சனத்தொகை பெருகிச்செல்வது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். Fraser Anning-இன் அரசியல் கொள்கைகள் தனக்கு பிடித்திருப்பதாகவும் வரி தொடர்பில் நாட்டு மக்களின் நலன் கருதி வெளிப்படுத்தியுள்ள கொள்கை தன்னை பெரிதும் ஈர்த்துக்கொண்டதாகவும் Rajan Vaid கூறியுள்ளார்.
