தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Kangaroo Island-கங்காரு தீவை அடுத்த 15 ஆண்டுகளுக்குள் பூனைகளே இல்லாத தீவாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய தீவான கங்காரு தீவில் சுமார் 3,000 முதல் 5,000 வரையான காட்டுப்பூனைகள் வாழ்கின்றன.
இவை அங்கு வாழும் பறவைகள், பென்குயின்கள், ஊர்வன மற்றும் சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் செம்மறியாடுகள் உட்பட பல விலங்குகளைப் பாதிக்கும் toxoplasmosis , sarcosporidiosis ஆகிய நோய்களும் காட்டுப்பூனைகளால் பரப்பப்படுகின்றன.
எனவே அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இவற்றை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கை அரசின் சுற்றுச்சூழல் துறையின் உதவியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது.
இதேவேளை காட்டுப்பூனைகள் மட்டுமல்லாமல் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளும் இல்லாத இடமாக, கங்காரு தீவு மாற்றப்படுவதாக அத்தீவின் மேயர் Peter Clements தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கு வாழும் பூனைப் பிரியர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழும் என்ற போதிலும் சட்டத்தின்படி தாம் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர் பூனைகளை இல்லாதொழிக்கும் நடைமுறை மனிதாபிமான விதிகளுக்கு உட்பட்டே செயற்படுத்தப்படுமெனக் கூறியுள்ளார்.
