ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோருவதற்காக படகு மூலம் வந்த இலங்கையர்கள் 20 பேர் இந்தியப்பெருங்கடலில் வைத்து இடைமறிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தநிலையில், இவர்கள் அனைவரும் இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டதாக The Australian செய்தி வெளியிட்டுள்ளது.
அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்தியேக விமானத்தில் குறித்த 20 பேரும் இன்று காலை 6 மணிக்கு கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து கொழும்பு நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் கூறுகின்றது.
குறித்த விமானம் புறப்பட்டுச்சென்றுள்ளமையை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்த மறுத்துள்ளபோதிலும், ஆஸ்திரேலியா நோக்கிவரும் சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் எவரும் திருப்பியனுப்பப்படுவர் என உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருசிலரை மட்டும் உள்ளடக்கிய இந்நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டபோதிலும் flight tracking software பயன்படுத்தி The Australian இச்செய்தியை உறுதிசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த 20 பேரும் கடந்தவார இறுதியில் இந்தியக் கடலில் பயணம்செய்துகொண்டிருந்தபோது இடைமறிக்கப்பட்டிருந்ததாகவும் கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியா நோக்கி வந்த மூன்றாவது படகு இது எனவும் குறிப்பிடப்படுகிறது.
