வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது என்று, நியூசிலாந்து நாட்டில் புதிதாக பதவியேற்ற லேபர் கூட்டணி அரசு அறிவித்திருந்த நிலையில், இதிலிருந்து ஆஸ்திரேலியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.
நியூசிலாந்து நாட்டில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் ,உள்ளூர்வாசிகள் வீடுகள் வாங்குவது கனவாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, தாம் பதவிக்கு வந்தால் “நியூசிலாந்து விற்பனைக்கல்ல” என்றும், வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது என்ற புதிய கொள்கையை அறிமுகம் செய்வோம் என்றும், சிறிய கட்சியான New Zealand First, தேர்தல் வேளையில் அறிவித்திருந்தது.
New Zealand First கட்சியால் தனியாக பதவிக்கு வர இயலவில்லை என்றபோதிலும், தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றிய லேபர் கட்சியுடன் New Zealand First கட்சி இணைந்து கூட்டணி அரசை அமைத்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டவர் இனி நியூசிலாந்து நாட்டில் வீடு வாங்க முடியாது எனும் புதிய கொள்கையை தமது அரசு 2018ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யும் என்று, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற Jacinda Ardern அறிவித்திருந்தார். எனினும் இப்புதிய சட்டம் ஆஸ்திரேலியர்களுக்குப் பொருந்தாது என அவர் கூறியுள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றதன் பின் தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிட்னி வரும் Jacinda Ardern, பிரதமர் Malcolm Turnbull-உடன் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
