பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலி பங்குளை விற்று பெருந்தொகையான ஆஸ்திரேலியார்களை ஏமாற்றிய மோசடிக்கும்பலை பிலிப்பீன்ஸ் பொலீஸார் கையும் களவுமாக கைது செய்திருக்கிறார்கள்.
இந்தக்கும்பல் பொலீஸாரால் கைது செய்யப்படும் காணொளி இணையமெங்கும் வைரலாகியிருக்கிறது.
பிரபலமான நிறுவனங்களின் பெயர்களைக்கூறி அவற்றின் பெயரில் தாங்கள் பங்குகளை விற்பதாக தெரிவித்து மலிவான பெறுமதியில் அவற்றை விற்பனை செய்து பெருந்தொகையான ஆஸ்திரேலியர்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்றும் இந்த மோசடியில் பெரும் எண்ணிக்கையிலான ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த மோசடிக்கும்பலில் இணைந்து பணியாற்றிவிட்டு பொலீஸாருக்கு தகவல் கொடுத்த நபர் ஒருவரின் மூலம் இந்த ஒட்டுமொத்த கும்பலும் அகப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபர் இந்த மோசடிக்கும்பலின் நடவடிக்கை தொடர்பாக கூறும்போது - ஒவ்வொரு நாளும் 200 ஆஸ்திரேலியர்களின் பெயர் விவரம் தமக்கு தரப்பட்டு அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த சட்டவிரோத பங்கு விற்பனையை மேற்கொள்வதற்கு கேட்கப்படுவதாகவும் இந்தப்பணியை செய்துகொடுத்தால் தமக்கு ஒரு வாரத்துக்கு 11 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர் வரையில் கையூட்டாக கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.இவ்வகையிலான அநாமதேய அழைப்புக்களினால் இந்த மோசடி கும்பல் ஒரு நாளில் மாத்திரம் இரண்டரை லட்சம் டொலர் வரை லாபமடைவதாகவும் இந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆஸ்திரேலிய வங்கியொன்றிலுள்ள பெருந்தொகையான பணம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
