ஆஸ்திரேலிய இளைஞனையும் அவரது அமெரிக்க காதலியையும் கொலைசெய்துவிட்டு சுமார் இரண்டு வாரங்களாக பொலீஸிடம் அகப்படாமல் மறைந்திருந்த கனடிய இளைஞர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டதாக கனடிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 15 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இடம்பெற்ற படுகொலை மற்றும் Dease Lake பகுதியில் இடம்பெற்ற இரண்டு குழந்தைகளின் தகப்பன் ஒருவரின் கொலை தொடர்பில் இவ்விரு இளைஞர்களும் கடந்த 15 நாட்களாக தேடப்பட்டுவந்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கிடந்த இரண்டு சடலங்கள் தொடர்பில் ஆரம்பத்தில் தகவல் கிடைத்தபோது, அவற்றை அடையாளம் காண்பதற்கு பொலீஸார் பகிரங்க அறிவிப்பை விடுத்திருந்தனர். மூன்று நாட்களில் அவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டனர்.
Chynna Deese, (23) என்ற அமெரிக்க யுவதியும் அவரது காதலரான ஆஸ்திரேலிய இளைஞன் Lucas Fowler (24) என்றும் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதையடுத்து, கொலையாளிகளை பிடிப்பதற்கு பொலீஸார் பொதுமக்களின் உதவியை கோரியிருந்தனர்.
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட, அடுத்தநாள் இன்னொரு நபரது சடலம் எரிந்தநிலையில் Dease Lake பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த தொடர்கொலைகள் தொடர்பாக செய்திகள் வெளிவர, அது கனடாவை மாத்திரமல்லாமல் உலக நாடுகளையே உலுக்கியது. வெளிநாட்டு செய்திச்சேவைகளில் இந்த தகவல் முதன்மை செய்தியாக வெளியாகத்தொடங்கியது.
பொலீஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் முழு அளவிலான விசாரணைகளை மேற்கொண்டார்கள். பொதுமக்களின் உதவியின்றி இந்தக்கொலைகளின் பின்னணியை அறியமுடியாது என்று அனைத்து தரப்பினரிடமும் தகவல்களை எதிர்பார்த்தனர்.
அப்போது, இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட இடத்துக்கு அண்மையில் இரண்டு இளைஞர்கள் தெருவோரமாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை தான் நேரில் கண்டதாக ஒருவர் பொலீஸாருக்கு தகவல் கொடுத்திருந்தார். அந்த தகவலை வைத்து உடனடியாக பொலீஸார் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தனர் அவர்கள் Kam McLeod (19) , Bryer Schmegelsky (18) என்ற இளைஞர்கள் என்று இருவரதும் அடையாளத்தை நாடு முழுவதும் அறிவித்தனர். அவர்களை கண்டால் உடனடியாக பொலீஸிற்கு தகவல் கொடுக்கும்படியும் யாரும் அவர்களை அணுகவேண்டாம் என்றும் அறிவித்திருந்தார்கள்.
ஜூலை 29 ஆம் திகதி Manitoba பிரதேசத்தில் அவர்கள் அவதானிக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெருமளவான படையினர் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. ஒருகட்டத்தில் ஒன்டாரியோ பொலீஸாருக்கு 30 துப்புக்கள் கிடைக்கப்பெற்றதாக கூறப்பட்டது. அவை தொடர்பில் மிகக்கவனமாக விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக தாங்கள் "கொலையாளிகளை நெருங்கிவிட்டோம்" என்று தேடுதல் படையினர் அறிவித்திருந்தபோதும் நம்பிக்கையான தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
இந்நிலையில், நேற்று Gillam பகுதியில் - அதாவது எரிந்த நிலையில் எடுக்கப்பட்ட மூன்றாவது சடலம் கிடந்த இடத்துக்கு ஆறு மைல் தொலைவிலுள்ள - Nelson River பகுதி புதருக்குள்ளிருந்து கொலையாளிகள் என்று கருதப்படும் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டிருக்கின்றன.
