தடைசெய்யப்பட்ட நீதிமன்ற செய்தியை வெளியிட்டார்கள் அல்லது வெளியிடுவதற்கு துணைபோனார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலியாவில் 36 ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று மெல்பேர்னில் நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையில் குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு மிகவும் குழப்பமான வகையில் உள்ளது என்றும் இது தொடர்பில் வழக்கு தொடுனர்கள் மேலும் விளக்கங்களை வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சிறுவர் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றஞச்சாட்டப்பட்டிருந்த கார்டினல் ஜோர்ஜ் பெல் வழக்கு குறித்த நீதிமன்ற செய்திகளை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தபோது அதனை மீறி செய்தி வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலியாவின் 36 ஊடகவியலாளர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பானால் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பேரில் சிறை செல்லவேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட 36 ஊடகவியலாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்று வழக்கு தொடுனர்கள் தங்களது வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அத்துடன், குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக குறிப்பிட்ட நீதிமன்ற ஒழுங்கு மீறல் வழக்கில் ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகவும் வித்தியாசமானதும் விசித்திரமானதுமான இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட ஊடகவியலாளர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்களில் ஒருவர் - இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட குற்றங்களில் சரியான விளக்கங்கள் இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பலர் அவர்களது தகுதிநிலை சார்ந்து குற்றமிழைத்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளார்களே தவிர, அவர்கள் எவ்வாறு குற்றமிழைத்தார்கள் என்ற விளக்கம் வழக்கில் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். வழக்கு தொடுனர்கள் குறிப்பிட்டதுபோல பட்டியல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் எவ்வாறு ஊடகவியலாளர்களின் குற்றங்களாக அமையும் என்ற மேலதிக விளக்கம் தேவை என்றும் அவர் கூறினார்.
வழக்கின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
