நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்ட செய்தியை வெளியிட்டதன்மூலம் நீதிமன்ற உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஊடகங்களின் ஆசிரியர்கள் உட்பட 36 ஊடகவியலாளர்களுக்கு விக்டோரிய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருக்கிறது.
சட்டத்தை துஷ்பிரயோகம் செய்த குறிப்பிட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும் என்று விக்டோரிய சட்டத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
போப்பாண்டவருக்கு நெருக்கமானவரான கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு எதிரான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த சமயம், அது தொடர்பான செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதற்கு நீதிமன்றம் விசேட தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த தடை உத்தரவை மீறி செய்தி வெளியிட்டார்கள், ஆசிரியர் தலையங்கங்களை வரைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நீதிமன்ற செய்தியாளர்கள், ஊடகவியாளர்கள் என 36 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
The Age, The Herald Sun, The Sydney Morning Herald, Sydney's Daily Telegraph, Australian Financial Review, Nine Entertainment Co Pty Ltd போன்ற ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஊடகங்களை சேர்ந்தவர்கள் உட்பட பலர் இந்த சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள்.
ஜோரஜ் பெல் வழக்கு விசாரணையினை நடத்திய நீதிபதியின் நெறிப்பதடுத்தலின் கீழ் சட்டத்திணைக்களத்தின் வழக்குத்தொடுனர்களால் நீதிமன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கும் இந்த விவகாரம் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
