- ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசியின் பெயர் மாற்றப் படுகிறது
- சில சர்ச்சைகளைத் தோற்றுவித்த இந்தத் தடுப்பூசியின் புதிய பெயர் Vaxzevria
- இதன் மூலம், உலகளாவிய அளவில் தடுப்பூசிக்குத் தனி அடையாளம் கிடைக்கும் என்று அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்
- இது வரை நாட்டில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான (சுமார் 15.6 மில்லியன்) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, அதில் ஏழு பேர் இறந்துள்ளனர்
- புதிய பெயர் சர்வதேச பயணத்தை மக்களுக்கு எளிதாக்கும் என்று நிறுவனம் கூறுகிறது
AstraZeneca தடுப்பூசி போடுவதால் மிக அரிதாக ஏற்படும் பக்க விளைவுகள், தடுப்பூசி குறித்து மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்தது.
உலகளாவிய பெயர் மாற்றத்தின் ஒரு பகுதியாக, AstraZeneca தடுப்பூசியும் புதிய பெயர் சூட்டப்படுவதாகவும், அதனால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளி நாட்டுப் பயணம் ஆரம்பிக்கும் போது, மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை இலகுவில் நிரூபிக்க முடியும் என்றும் அதன் உற்பத்தியாளர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப் பெயர் மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவிலும் பெயர் மாற்றம் செய்வது அதன் அடுத்த கட்ட செயல்பாடாகும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலரின் இரத்தம் உறைவடைந்தது. சிலர் இந்தத் தடுப்பூசி போட்ட பின்னர் இறந்தமை சர்ச்சையை உருவாக்கியது. ஒரு சிலரின் இரத்த உறைவு இறப்புகள் இந்தத் தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தப்பட்டன.
உடனே, வயது எல்லைகள் வரையப்பட்டு குறிப்பிட்ட வயது எல்லைக்குட்பட்டவர்கள் குறிப்பிட்ட தடுப்பூசி போடுமாறு பரிந்துரைக்கப் பட்டது.
அந்த நேரத்தில் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இன்னொரு தடுப்பூசியான ஃபைசர் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருந்தமையால், மக்களுக்குத் தேவையான தடுப்பூசி எந்த வயதினருக்கும் கிடைக்கவில்லை.
வைத்தியர்களுடன் கலந்துரையாடிய பின்னர், வயது வந்தோர் அனைவரும் AstraZeneca போடலாம் என்று அதிகார பூர்வமாக ATAGI அறிவித்தது, ஆனால் மக்களிடையே AstraZeneca என்ற பெயரில் சந்தேகம் தொடர்ந்தது.
ஒட்டுமொத்தமாக, நாட்டில் மொத்தம் 15.6 மில்லியனுக்கும் அதிகமான AstraZeneca தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன அதில் ஏழு பேர் மட்டுமே AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மிக அரிதான இரத்த உறைவு சிக்கல்கள் காரணமாக இறந்துள்ளனர்.
உலகெங்கிலும், 750 மில்லியன் தடுப்பூசிகள் AstraZeneca நிறுவனத்தால் 170 நாடுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அத்துடன் இங்கிலாந்தில் இந்தத் தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் தற்போது முடக்க நிலை நடைமுறையில் இல்லை.
நாட்டில் தற்பொழுது மக்கள் எந்தத் தடுப்பூசி என்ற வேறுபாடின்றி போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பெயர் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் சர்வதேச பயணத்தை அனுமதிக்க அறிமுகப்படுத்தப்படும் தடுப்பூசி கடவுச் சீட்டுகள் என்பவற்றில் பயன்படுத்தப்படும்.
பெயர் மாற்றப் பட்டாலும்,
அதே தடுப்பூசிதான்
என்றும், அது
ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டால் என்ன, இங்குள்ள CSL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டால் என்ன, ஒரே தடுப்பூசி தான்
என்று அதன் உற்பத்தியாளர் வலியுறுத்தினார்கள்.
