2013 ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த முஸ்தபா அசிமிதபார், முதலில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு, பின்பு ஆறு ஆண்டுகள் மனுஸ் தீவில் வாழ்ந்துவந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நவம்பரில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பெறுவதற்கு பதிலாக Mantra ஹோட்டலில் 13 மாதங்களும், Park ஹோட்டலில் ஒரு மாதமும் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள முஸ்தபா, பெடரல் நீதிமன்றில் அரசுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹோட்டலிலிருந்து விடுவிக்கப்பட்டபோதிலும், குறிப்பிட்ட காலப்பகுதி முழுவதும் தான் நரக வாழ்க்கை வாழ்ந்ததாகவும், இதனால் மனதளவில் மிக மோசமான பாதிப்புகளை இன்றுவரை எதிர்கொண்டுவருவதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கிற்குப் பொறுப்பான சட்டத்தரணியாக Lisa De Ferrari SC நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்தபா தடுத்து வைக்கப்பட்ட முறை சட்டவிரோதமானது எனவும், Mantra மற்றும் Park ஹோட்டல்களை தடுப்பு மையங்களாக மாற்றுவதற்கு செலவிடப்பட்ட பணத்திற்கு சட்டப்படி அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை எனவும் சட்டத்தரணி Lisa De Ferrari SC தெரிவித்துள்ளார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால், அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதை எளிதாக்கியிருந்த Medevac சட்டம் தற்போது மீளப்பெறப்பட்டுள்ளபின்னணியில், இதன்கீழ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட அகதிகளில் பெரும்பாலானோர் பிரிஸ்பேனிலும் ஏனையவர்கள் மெல்பன் ஹோட்டலிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
