மனுஸ் தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டவர்களில் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் மெல்பேர்னிலுள்ள ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மீளப்பெறப்பட்ட Medevac சட்டத்தின்கீழ் சுமார் 180 பேர் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டிருந்தநிலையில், இவர்களில் சிலர் மருத்துவமனைகளிலும் ஏனையவர்கள் தடுப்புமுகாமுக்கு மாற்றீடான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள் மெல்பேர்ன் Preston-இலுள்ள Mantra ஹோட்டலில் பல நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக The Age தெரிவித்துள்ளது.
குறித்த ஹோட்டலில் ஒரு தளம் முழுவதும் அகதிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமையில் காவலர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாகவும், அங்குள்ளவர்கள் வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.
தினமும் 2 மணிநேரங்கள் Mantra ஹோட்டலில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் அங்குள்ளவர்களில் சிலர் 5 மாதங்களுக்கும் மேலாக குறித்த ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனுஸ், நவுறு தீவில் இருந்ததற்கும் தற்போது ஹோட்டலில் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்றும், உண்மையில் சொல்லப்போனால் முற்றிலும் அடைக்கப்பட்ட ஹோட்டலில் இருப்பது முன்னர் இருந்த நிலைமையைவிட மோசமாக உள்ளது எனவும் அங்குள்ள ஒரு அகதி The Guradian-க்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடல்கடந்த தடுப்பு முகாமில் இருந்தாலோ, ஹோட்டலில் தங்கவைத்தாலோ, அகதிகளுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்பு மாறப்போவதில்லை என்றும், அறைக்கு வெளியே காவலர்களை கடமைக்கு வைத்திருப்பதைப் பார்க்கும் போது இங்கும் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையே காட்டுவதாக குறித்த ஹோட்டலுக்குச் சென்ற Refugee Advice and Casework Service- ஐச் சேர்ந்த Sarah Dale விமர்சித்துள்ளார்.
மெல்பேர்னைப் போலவே சிகிச்சைக்காக பிரிஸ்பேர்ன் கொண்டுசெல்லப்பட்டவர்களும் இவ்வாறு ஹோட்டல்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
