கன மழை பெய்த காரணத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் கடலோர மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற் பகுதியிலிருந்து தீவிரமடையத் தொடங்கிய மழையினால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருகி ஓடி, மக்களின் நடமாட்டத்தை முற்றாக நிறுத்தியிருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் சுமார் 11 பேரும், கோட்டயம் மாவட்டத்தில் மேலும் 14 பேரும் இதுவரை நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் AFP செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, குறைந்தது 100 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்..

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர் காணாமல் போயுள்ளார்கள் என்று அதிகாரிகளால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.
பேருந்துகள் மற்றும் கார்கள் வெள்ளத்தில் மூழ்கும் காணொலிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது இரங்கலை ட்வீட் (tweet) செய்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி வழங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த நிலை காரணமாகப் பெய்யும் கனமழை திங்கட்கிழமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில், உத்தரகாண்டம் மாநிலத்திலும் இமாச்சலப் பிரதேசத்தில் சில பகுதிகளுலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
