லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாதவர்களுக்கான அரச கொடுப்பனவை கிழமைக்கு 50 டொலர்களால் அதிகரிக்கவேண்டும் என்று கட்சியின் உயர்மட்டத்தினர் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத்தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டின்போது இந்த முன்மொழிவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய சமூக சேவைகள் வாரியத்தின் கணக்கெடுப்பின் பிரகாரம் தனிநபர் ஒருவரின் வாராந்த அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு 433 டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் வேலையில்லாதவர்களுக்கு அரசு தற்போது வழங்கிவரும் கொடுப்பனவு வாரத்துக்கு 272.90 டொலர் அல்லது நாளொன்றுக்கு 38.98 மட்டுமே.
ஆஸ்திரேலியாவில் தற்போது அண்ணளவாக 647 000 பேர் தனிநபர் அரச கொடுப்பனவை பெற்றுவருகிறார்கள். இவர்களில் 55 வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வேலையில்லாதவர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து லிபரல் ஆட்சியால் கைவிடப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கவேண்டும் என்று, லேபர் முக்கியஸ்தர் Anthony Albanese-யின் சகாவும், நடைபெறவுள்ள லேபர் கட்சி மாநாட்டின் முக்கிய பிரதிநிதியுமான Sydney Inner West council மேயர் Darcy Byrne "த கார்டியன்" ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
