Meningococcal எனப்படும் ஆட்கொல்லி நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் பதின்ம வயதினருக்கு தடுப்பூசி போடுகின்ற திட்டத்தை பிரதமர் Scott Morrison அறிவித்திருக்கிறார்.
52 மில்லியன் டொலர்கள் செலவில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, அடுத்த ஏப்ரல் முதல் 14- 19 வயது வரையானவர்கள் ACWY என்ற தடுப்பூசியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
Meningococcal எனப்படும் ஆட்கொல்லி நோய்த்தொற்று ஏற்படுவது மிகவும் அரிதென்றாலும் 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த நோயின் தாக்கம் முன்பிலிருந்து சற்று அதிகரித்திருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களம் கூறுகிறது.இதன் பிரகாரம், இந்த தாக்கத்திலிருந்து தப்புவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
Meningococcal எனப்படும் ஆட்கொல்லி நோயானது நாசியின் பின்புறத்திலும் தொண்டைக்குள்ளும் புகுந்துவிடுகின்ற ஆட்கொல்லி பக்டீரியாவினால் ஏற்படுவது. இந்த பக்டீரியா மிகவேகமாக குருதிக்கலங்களுக்குள் பரவி அவற்றை தாக்கி அளித்து தோல்பரப்பின் உள்ளே இரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான இந்த இரத்தக்கசிவு மிகவேகமாக மரணத்தை ஏற்படுத்திவிடும்.
Meningococcal நோயினால் 2016 இல் 11 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. 2017 இல் அந்த எண்ணிககை இருபத்து எட்டாக உயர்ந்திருந்தது. இந்த ஆட்கொல்லி நோயினால் இந்த ஆண்டு இதுவரைக்கும் பத்துப்பேர் நாடளாவிய ரீதியில் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
